ஈழத்தமிழினத்தின் இருப்பையும் தாயக தேசிய சுயநிர்ணய உரிமையையும் நலிவடையச் செய்வதே இலங்கை அரசின் நீதியாக மாறிவிட்ட நிலையில், தேசிய ஒருமைப்பாட்டை எங்கே தேடுவது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கு, கிழக்கில் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி கோரி நீண்டகாலமாகக் காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் நேற்று (26) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகிய இரு விடயங்களிலும் தொடர்ச்சியான போராட்டங்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், நில ஆக்கிரமிப்பு, மத ஆக்கிரமிப்பு, நீதிமன்ற உத்தரவு மீறல்கள் மற்றும் தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பிலும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இனக்கலவரங்கள், அடக்குமுறைகள் மற்றும் படுகொலைகள் மூலம் கடந்த 78 ஆண்டுகளாக தமிழ் மக்களின் உயிர்கள், உடமைகள் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இறுதிப் போரின்போது இடம்பெற்ற இனப்படுகொலைக்கும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும், அரசியல் கைதிகளுக்கும் இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்துக்கு 649 மில்லியன் ரூபாவும், இழப்பீடுகளுக்கான அலுவலகத்துக்கு 1,091 மில்லியன் ரூபாவும் 2027ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிதியூடாக வன்னியின் மூன்று மாவட்டங்களிலும் எத்தனை குடும்பங்கள் பயனடையவுள்ளன, எத்தனை முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும், முறைப்பாடுகளின் முன்னேற்றத்தை தமிழில் எழுத்துமூலம் அறிந்துகொள்ளும் நடைமுறை ஏற்படுத்தப்படுமா எனவும் ரவிகரன் கேள்வி எழுப்பினார்.
தமிழ் மக்களின் நீண்டகால நீதிக் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முழுமையான தீர்வை வழங்கினால், தேசிய ஒருமைப்பாடும் நல்லிணக்கமும் தானாகவே மலரும் எனவும் அவர் வலியுறுத்தினார்