பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக குறிப்பிட்டுக் கொண்ட அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் சட்டமானால் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மரணிக்கும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எச்சரிக்கை விடுத்தார்.    
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் சட்டமூல வரைவை தயாரித்தது யார் என்பதை நீதியமைச்சர் பாராளுமன்றத்துக்கும், நாட்டு மக்களுக்கும் அறிவிக்க வேண்டும்.இந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கு அமைச்சருக்கு இடமளிக்கிறேன்.எனது கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கவில்லை. அவ்வாறாயின் சட்டவரைவை தயாரித்தது யார் என்று அவருக்கு தெரியாதா, மக்கள் பாரிய எதிரர்பார்ப்புடன் தான் இந்த அரசாங்கத்துக்கு ஆணை வழங்கினார்கள். மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளார்கள் என்பதற்காக அரசாங்கம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிராக செயற்படுகிறது. நீதித்துறை தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ள பின்னணியில் மனசாட்சிக்கு அமைய உரையாற்ற முடியாத காரணத்தால் தான் நீதியமைச்சர் குறிப்பு எழுதிக் கொண்டு வாசித்தார்.அரசியலமைப்பால் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை முடக்கும் வகையில் அரசாங்கம் அண்மைகாலமாக பல சட்டமூலங்களை கொண்டுள்ளது.நாட்டு மக்களின் பெரும்பாலானோருக்கு இவ்வாறான சட்டங்கள் குறித்து போதுமான விளக்கம் போதாது. இந்த சட்டங்கள் எதிர்காலத்தில் மிக மோசமாக பயன்படுத்தப்படும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத செயற்பாடுகளை தடுத்தல் உள்ளிட்ட சட்டமூலங்களை அரசாங்கம் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த சட்டமூலங்கள் நாட்டு மக்களின் அப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கும் முற்றிலும் விரோதமானது.நாட்டு மக்கள் மீது அரசாங்கம் பற்றுக் கொண்டுள்ளதாயின் ஏன் இவ்வாறான சட்டமூலங்களை கொண்டு வந்துள்ளது.பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக குறிப்பிட்டுக் கொண்டு பாரதூரமான வகையில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை அரசாங்கம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிளஸ் என்றே குறிப்பிட வேண்டும். இந்த சட்டமூலம் அண்மையில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் ஆராயப்பட்ட போது முன்வைத்த கேள்விகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் பதிலளிக்க முடியவில்லை. அந்தளவுக்கு இந்த சட்டமூலம் பாரதூரமானது. ஆகவே இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.நீதித்துறையை பலப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தது. இதன் பின்னரே ஜனநாயக விரோத சட்டமூலங்களை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் கடந்த காலங்களை காட்டிலும் மிக மோசமான சட்டங்களை கொண்டு வந்துள்ளது.செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் எழுந்துள்ள கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் பதிலளிக்கவில்லை. பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு சமீபத்தில் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.இதுதான் இந்த நாட்டின் நிலைமை.வலிந்து காணாமல் போனோர் விவகாரத்துக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. நீதிக்கோரி போராட்டத்தில் ஈடுபடும் உறவுகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுகிறது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காக இன்றுவரை போராடுகிறார்கள்.ஆகவே அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.அதற்காகவே நாங்களும் போராடுகிறோம் என்றார்.