சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைகள் 2027 மார்ச் மாதத்துடன் நிறைவடைவதால், அதன் பின்னர் ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டொலர் கடனைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதற்கேற்ப நாட்டின் தேசிய உற்பத்தி, கைத்தொழில், சேவைகள் மற்றும் விவசாயத் துறைகளை வலுப்படுத்தாவிடின் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.   
அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் 17ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர்,மக்களால் இன்று வாழ முடியாத அளவுக்குப் பணவீக்கம் அதிகரித்துள்ளது. பணவீக்கம் 9 சதவீதமாக இருக்கக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் கூறும் வேளையில், நாட்டில் வறுமை 60 சதவீதமாக உள்ளதாக உலக வங்கி தெரிவிக்கிறது.இந்த நிலையில், வழக்கமான சட்டகத்துக்குள் முடங்கிவிடாமல் புதிய முறையில் சிந்தித்து, சமூக வலுவூட்டலுக்கான மாற்று வழிமுறைகள் ஊடாக நாட்டின் சகல கிராமம், நகரம் மற்றும் மாகாண மக்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போதைய அரசாங்கம் கையெழுத்திட்டுள்ள நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு மக்களுக்கு எதிரான ஒன்றாகவே காணப்படுகின்றது. இந்தச் சூத்திரத்தின்படி பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்போது கடன் நிவாரணம் குறையும் வகையிலான கடன் பொறியில் நாம் சிக்கியுள்ளோம். ஆட்சிக்கு முன்னர் இந்த இணக்கப்பாட்டை மாற்றுவோம் எனக் கூறிய அரசாங்கம், இன்று அதனை அப்படியே நடைமுறைப்படுத்தி வருகின்றது.அரச கொள்கைகளையும் தேசியக் கொள்கைகளையும் அடித்தள மட்டத்திற்கு எடுத்துச் செல்லும் மகத்தான தேசியப் பொறுப்பை கிராம உத்தியோகத்தர்களே நிறைவேற்றுகின்றனர்.மக்களின் துயரங்களை நேரடியாக அறிந்து செயற்படும் இந்தச் சேவைக்குப் பொருத்தமான, அரச சேவை ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பள அளவுத்திட்டத்தை வழங்க அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. கம்மன்பில குழு அங்கீகரித்த 20 லீற்றர் எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை என்பதுடன், 2027 ஏப்ரல் முதல் வழங்கப்படவுள்ள கொடுப்பனவும் போதுமானதல்ல.ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்கள் நிறைவேற்றாத வாக்குறுதிகள் எனும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் அல்லர். கிராம உத்தியோகத்தர்களின் சேவைப் பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எமது கட்சி எப்போதும் குரல் கொடுத்துள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இவற்றுக்கு முறையான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும்.எல்நினோ மற்றும் லாநினா தாக்கங்களால் வானிலை மற்றும் காலநிலையில் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் வறட்சி மற்றும் பெருமழை அபாயங்களுக்கு முகங்கொடுக்கும் மக்கள் முதலில் கிராம உத்தியோகத்தர்களையே நாடி வருகின்றனர். நமது நாட்டின் அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்பு காலாவதியாகிவிட்டது.எனவே, பேரழிவு ஏற்பட்ட பின்னர் பதிலளிப்பதற்குப் பதிலாக, அனர்த்தங்களை முன்கூட்டியே கணித்து அதன் பாதிப்புகளைக் குறைக்கும் வகையிலான முன்னாயத்த அனர்த்த முகாமைத்துவத் திட்டம் ஒன்றை உருவாக்குவது அவசியமாகும் என்றார்.