ஆயுதங்கள், போர் போட்டி, பிளவுகள் மற்றும் மன உளைச்சல் ஆகிய உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடும் ஒரு காலகட்டத்தில், ஒவ்வொருவரும் தம் வாழ்வையும், சமூகத்தையும், நாட்டையும் கட்டியெழுப்ப பௌத்தம் காட்டும் நடைமுறை வழிகாட்டல் மிகவும் முக்கியமானது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
பௌத்தம் நமக்குக் கற்பிப்பது மற்றவர்களை மாற்றுவதற்கு முன்னர் நம்மிடமிருந்து மாற்றத்தைத் தொடங்குவதையும், பலத்தினாலோ வெறுப்பினாலோ உலகை வெல்லாமல், புரிதலினாலும் அமைதியினாலும் இதயங்களை வெல்வதையுமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த உன்னதமான தர்மம் எப்போதும் இந்த உலகிற்கு மகிழ்ச்சிக்கான பாதையைத் திறக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
களனி, மானெல்வத்த நாகானந்த சர்வதேச பௌத்தக் கற்கை நிறுவனத்தில் நடைபெWfpd;w உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் (World Buddhist Sangha Council – WBSC) 60 ஆவது ஆண்டு நிறைவு நினைவு விழாவின் தொடக்க நிகழ்வில் இன்று (28) காலை கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், நாகானந்த சர்வதேச பௌத்தக் கற்கை நிறுவனத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கும் நிகழ்வும் இதனுடன் இணைந்து நடைபெற்றது.
டிசம்பர் 02 ஆம் திகதி வரை நடைபெறும் இந்தச் சர்வதேச சம்மேளன மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிக்குமார், பிக்குணிமார் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் சுமார் 800 பேர் கலந்து கொண்டுள்ளனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி முப்பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர் சுமார் 5,000 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
இத்தகைய சர்வதேச அளவிலான நினைவு விழாவை இலங்கையில் நடத்துவதற்குக் கிடைத்தமை நாட்டிற்குப் பெருமையளிப்பதுடன், நமது நாட்டின் பௌத்த பாரம்பரியம் மற்றும் மத அடையாளத்தை சர்வதேசத்தின் முன் மீண்டும் வெளிப்படுத்தக் கிடைத்த தனித்துவமான வாய்ப்பாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டில் புத்த பெருமானின் போதனைகள் குறித்து மீண்டும் ஆழமாக ஆராய்வதும், அப்போதனைகளுக்கு ஏற்ப நடப்பதும் ஒட்டுமொத்த உலக சமூகத்திற்கும் பெரும் நன்மைகளைப் பெற்றுத் தரும் எனக் குறிப்பிட்டு, அதன் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டுத் தொகுக்கப்பட்ட நினைவு மலர் மற்றும் அதற்காக வெளியிடப்பட்ட நினைவு முத்திரை ஆகியன இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
உலக பௌத்த சங்க சம்மேளனம் இலங்கையில் தொடங்கப்பட்டமை தொடர்பான உத்தியோகபூர்வ பிரகடனத்தை உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி Chaokun Hui Xiong தேரர் இதன்போது முன்வைத்தார்.
களனிப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மகா விகார வம்ச சியாமோபாலி மகா நிகாயவின் அஸ்கிரி மகா விகாரப் பிரிவின் அநுநாயக்கருமான முதுகலைமாணி வணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரரும் இதன்போது விசேட ஆன்மீக உரையாற்றினார்.
முப்பீடங்களின் மகாநாயக்க மற்றும் அநுநாயக்கத் தேரர்கள் தலைமையிலான மகா சங்கத்தினரும், உலக பௌத்த சங்க சமேளனத்தின் தலைவர் மற்றும் செயலாளர் தேரர்களும், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பௌத்த பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.