வினைதிறனான காவல்துறை சேவை அவசியம்
இலங்கையில் தற்போது குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை தடுக்க வினைதிறனான காவல்துறை சேவை அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாவலையில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இன்று(10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வினைதிறனான காவல்துறை
இதுதொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், “நீதிமன்றத்திற்கு சாட்சியமளிக்க சென்று விட்டு திரும்பும் போது, சாட்சியாளர்கள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். ரி.56 ரக துப்பாக்கியுடன் வந்து சுட்டுக்கொல்கின்றனர்.
இதனால், மக்கள் நீதிமன்றத்திற்கு சென்று சாட்சியமளிக்க முடியாத நிலைமை. சாட்சியமளித்து விட்டு உயிருடன் வீட்டுக்கு செல்ல முடியுமா? இதுதான் நாட்டின் தற்போதைய நிலைமை.
நான்கு நாட்களில் 18 வயதுக்கும் குறைந்த 6 யுவதிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். போதைப் பொருள் நாடு முழுவதும் பரவியுள்ளது. பாடசாலை பிள்ளைகள் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
இவ்வாறான காலத்தில் நேர்மையான, வினைதிறனான காவல்துறை சேவை அவசியம். குறைந்தது மக்களின் உயிர்களையாவது காப்பாற்ற வேண்டும்.
காவல்துறை மா அதிபர் நியமனம்
இவ்வாறான நிலையில், காவல்துறை மா அதிபர் ஓய்வுபெற்ற போது, புதிய காவல்துறை மா அதிபரை நியமிக்க முடியாமல் போனமை கவலைக்குரிய விடயம்.
சீ.டி. விக்ரமரத்னவுக்கு பதில் காவல்துறை மா அதிபராக பணி நீடிப்பு வழங்கியமை பிறழ்வான நிலைமை.
காவல்துறை மா அதிபரை நியமிப்பது தொடர்பில் அரசாங்கத்திற்குள் காணப்படும் முரண்பாடுகள் காரணமாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கூடிய விரைவில் புதிய காவல்துறை மா அதிபரை நியமிக்க வேண்டும். இதனை செய்வதற்கு அரசியலமைப்பு பேரவைக்கு நேரடியான பொறுப்பு உள்ளது.
அரசியலமைப்பு பேரவை இந்த விடயத்தில் நேரடியாக தலையீடுகளை மேற்கொள்ள முடியும்” என்றார்.