இலங்கை நிலைமையை ஐ.நா உன்னிப்பாக கவனித்து வருகிறது

14.07.2022 10:00:00

 இலங்கை நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாக ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை விலை கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. அதன் அண்டை நாடான இந்தியா உதவிக்கரம் நீட்டி வருகிறது

. இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால், அந்நாட்டில் பல மாதங்களாக போராட்டம் நீடித்து வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சூழலில், ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 9ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர்.

எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை, கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாக ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நான் இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகிறேன். மோதலுக்கான அடிப்படைக் காரணங்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வது முக்கியமானதாகும். அமைதியான மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கான சமரச மனப்பான்மையை ஏற்றுக்கொள்ளுமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.