தியாக மனப்பாங்குடன் செயற்படுங்கள் – பிரதமர் மஹிந்த
உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்பு பெருநாளைக் கொண்டாடும் இலங்கையிலுள்ள அனைத்து இஸ்லாமிய சமூகத்தினருக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்காக உலக வாழ்க்கையிலிருந்து சற்று ஒதுங்கி ஆன்மீக சடங்கு முறைகளை நிறைவேற்றுவது ஒரு சிறந்த பணியாகும்.
அதற்காக இந்த நோன்பு காலத்தில் அனைவரும் நற்செயல்களில் மாத்திரம் கவனம் செலுத்துவது பாராட்டுக்குரிய விடயமாகும்.
பட்டினியில் உள்ள ஒருவரின் வலியைப் புரிந்துகொள்வதும், தியாக வாழ்வின் மதிப்பை உணர்வதும் இந்த நோன்பு காலத்தில் பெறும் விலைமதிப்பற்ற வாழ்க்கை மதிப்புகளாகும்.
நோன்புடன் தொடர்புடைய உன்னத நற்பண்புகளைப் பின்பற்றி அந்த நோன்பு காலத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ள இஸ்லாமிய மக்களுக்கு அதன் ஆன்மீக சாரத்தை சமூகமயமாக்குவதற்கான சந்தர்ப்பம் தற்போது உதயமாகியுள்ளது.
முழு நாடும் சவால்மிக்கதோர் காலகட்டத்திலுள்ள இந்த தருணத்தில் சமூகத்தில் உள்ள பிறர் குறித்த உணர்வுடன் தியாக மனப்பாங்குடன் செயற்படுமாறு அனைவரிடமும் தாம் கோரிக்கை விடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.