நிலையாக தங்கியிருக்க நாடு இன்றி தவித்துவரும் கோட்டாபய!

24.07.2022 10:34:44

சிறிலங்கா முன்னாள் அதிபர் கோட்டாபயவை  சிங்கப்பூரில் இருந்து வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசாங்கம் காலக்கெடு விதித்துள்ள நிலையில் அவர் நிலையான இருப்பிற்கு நாடு இன்றி தவித்து வருகிறார் என்று தகவல் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் விமானப்படை உதவி மூலம் ராஜபக்சக்களின் நட்பு நாடான மாலைதீவுக்கு கோட்டாபய தப்பிச் சென்றுள்ளார்.

அங்கு ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பு காரணமாக சிங்கப்பூருக்குசென்றார். அங்கும் அவருக்கு பல்வேறு நெருக்கடிகள் எழுந்துள்ளன. மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் கோட்டாபயவை அங்கிருந்து வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசாங்கம் காலக்கெடு விதித்தது.

அமெரிக்காவின் ஆதரவு

இந்நிலையில் அவர் இலங்கைக்கு மீண்டும் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

எனினும் தற்போதைய நிலையில் கோட்டாபய இலங்கை திரும்புவதை விரும்பவில்லை எனத் தெரிய வருகிறது. சிங்கபூரில் இருந்து சவுதி அரேபியாவுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் அவர் முன்னெடுத்துள்ளார்.

இதற்கு ஆதரவினை அமெரிக்கா வழங்கி வருகிறது. அமெரிக்காவின் நட்பு நாடான சவுதியில் பாதுகாப்பான முறையில் கோட்டாபயவை தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதவி விலகல் கடிதம்

இந்நிலையில்,கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். அதில் அவர் நாட்டு மக்களுக்காக தொடர்ந்தும் சேவையாற்றவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

நாட்டின் குழப்ப நிலை முடிந்த பின்னர் தப்பிச்சென்ற கோட்டாபய மீண்டும் நாடு திரும்ப உள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவுடன் கோட்டாபய தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு உள்வாங்கப்படலாம் என பொதுஜன பெரமுன கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.