இந்திய பாஸ்போர்ட் பெற்று தப்ப முயன்ற இலங்கைப் பெண் கைது.

25.06.2026 08:13:05

போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று இலங்கைக்கு தப்ப முயன்ற இலங்கைப் பெண் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

 

சென்னை பன்னாடடு விமான நிலையத்தில் பெண் ஒருவர் இலங்கை செல்ல முயன்றார். அவரது பாஸ்போர்ட்டை விமான நிலையத்தில், வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர் ஆய்வு செய்தார். அப்போது, அந்த பெண் கடந்த 2001ம் ஆண்டு இலங்கை பாஸ்போர்ட் மூலம் இந்தியா வந்தது தெரியவந்தது. தற்போது இந்திய குடியுரிமை பெற்ற பெண் போல் இந்திய பாஸ்போர்ட் மூலம் மீண்டும் இலங்கைக்கு செல்ல முயன்றதும் தெரியவந்தது.

 

அதை தொடர்ந்து வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர் அந்த பெண்ணை பிடித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் இலங்கையை சேர்ந்த மெரினா எனி(58) என்றும், கடந்த 2001ம் ஆண்டு இலங்கை பாஸ்போர்ட் மூலம் இந்தியா வந்ததும், அதன் பிறகு குவைத் சென்று பின்னர் 2003ம் ஆண்டு விருதுநகரை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு மீண்டும் இந்தியா வந்து விருதுநகரில் குடியேறியது தெரியவந்தது.

 

பின்னர் மெரினா எனி தான் இந்திய குடியுரிமை பெண் போல் இந்திய ஆவணங்களான ஆதார் கார்ட் , பான் கார்ட் வாக்காளர் அடையாள அட்டை பெற்று, தன்னை இலங்கை பெண் என்பதை மறைத்து இந்திய பாஸ்போர்ட் பெற்று சொந்த நாட்டிற்கு செல்ல முயன்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மெரினா எனியை கைது செய்தனர். அவரிடம் இருந்து இந்திய நாட்டின் அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.