இந்தியாவை ஏமாற்றும் நடவடிக்கையே பீரிஸின் இந்திய விஜயம்-விக்னேஸ்வரன்

08.02.2022 12:45:26

இந்தியாவை தனது நட்பு நாடென காட்டிக்கொள்ளும் விதமாக, இந்தியாவிற்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி இந்தியாவை ஏமாற்றும் நடவடிக்கையே இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் இந்திய விஜயம் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமானக.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனவே வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் வாக்குறுதிகளை நம்பி இந்தியா ஏமாந்துவிட கூடாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்கினேஸ்வரன் இந்திய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட இந்தியாவிற்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என குறிப்பிட்டார்.

ஆகவே இனப் படுகொலை குறித்த சர்வதேச விசாரணையை இந்தியா நேரடியாக வலியுறுத்தாமல் விட்டாலும் ஏனைய நாடுகளின் ஊடாக அதனை முன்னெடுப்பதற்குரிய இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் இந்தியாவினால் எவ்வளவு தூரத்திற்கு எமது அதிகாரங்களை பலப்படுத்த முடியுமோ அதுவே இந்தியாவின் பாதுகாப்பிற்கும் கைகொடுக்கும் என்றும் க.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.