கடல் கண்காணிப்பு விமானத்தை கையளித்தார் அமெரிக்க தளபதி!

11.10.2024 08:27:27

இலங்கை விமானப் படைக்கு அமெரிக்காவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட Beechcraft King Air 360ER விமானமொன்றை, கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற வைபவத்தில் அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

  

அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், பாதுகாப்பமைச்சின் செயலாளர் எயா வைஸ் மாஷல் சம்பத் துயகொந்த (ஓய்வுபெற்ற), இலங்கை விமானப்படையின் கட்டளைத்தளபதி எயா மாஷல் உதேனி ராஜபக்‌ஷ ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், இவ்வுயர்தர விமானம் கையளிக்கப்பட்டது.

நீண்டகாலமாக நீடித்திருக்கும் அமெரிக்க-இலங்கை பங்காண்மையின் ஒரு குறியீடாகவும், இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பலப்படுத்துவதில் ஒரு முக்கியமான படியாகவும் இது விளங்குகிறது.

அதிநவீன கண்காணிப்பு தொழில்நுட்பம் கொண்ட King Air விமானமானது, தனது கடற்பரப்பில் ரோந்து செல்வதற்கான, கடல்சார் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கான மற்றும் இந்து சமுத்திரத்திலுள்ள மிகமுக்கியமான வர்த்தக வழித்தடங்களைப் பாதுகாப்பதற்கான இலங்கையின் திறன்களை பலப்படுத்தும்.