பிரியந்தவின் வழக்கு விசாரணை – விசேட குழு கூட்டத்தில் தீர்மானம்
பாகிஸ்தான் – சியல்கோர்ட் பகுதியில் இலங்கையரான பிரியந்த குமார தியவடன கொடூரமாக சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளை நாளாந்தம் விசாரணை செய்ய பஞ்சாப் மாகாண அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நீதி அமைச்சர் மொஹமட் ராஜாவின் தலைமையில் இடம்பெற்ற சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பிலான மாகாண அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பிலான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியந்த குமார தியவடனவின் கொலை தொடர்பிலான வழக்கு 14 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று, இந்த வழக்கு விசாரணைகளை கண்காணிப்பு செய்வதற்கு விசேட நிலையமொன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக மாகாண அமைச்சரவை குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பிலான அறிக்கையொன்று இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எஞ்சிய குற்றவாளிகளை கைது செய்வதற்கான விசாரணைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.