அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டேன் .

12.05.2026 08:42:24

அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை வெளிப்படுத்துவதால் திட்டமிட்ட வகையில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளேன். வாக்குமூலமளிக்க ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களுக்கும் அழைக்கப்படுகிறேன் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

 

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று விசாரணைகளுக்காக முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று நாட்களின் பின்னர் அரசாங்கம் மிகவும் பலவீனமான முறையில் செயற்படும் என்று நான் குறிப்பிட்டேன். ஆரம்பத்தில் நான் மட்டும் தான் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டினேன். ஆனால் இன்று முழு நாடும் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறது.

 

அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை வெளிப்படுத்துவதால் திட்டமிட்ட வகையில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளேன். வாக்குமூலமளிக்க ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களுக்கும் அழைக்கப்படுகிறேன். 

 

ஊழல் மோசடிகள் பற்றி பொலிஸாருக்கும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கும் நாங்கள் தகவல் வழங்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது.

 

அரசாங்கத்தின் அனுசரணையுடன் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பு ஊடாக எமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியப்போவதில்லை. அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்துவேன் என தெரிவித்தார்.