திருமாவளவன் தனது கருத்துக்களை மீளப்பெற வேண்டும்!

08.02.2026 14:33:34

விடுதலைப் புலிகளின் தலைவரது திருமண வாழ்வு தொடர்பாக திருமாவளவன் கூறிய கருத்துக்கள் இதுவரை அவர் மீது எமது மக்கள் வைத்துள்ள மதிப்புகளை சுக்குநூறாக்கியுள்ளது என தெரிவித்துள்ள மூத்த போராளி காக்கா (மனோகர்) இந்த தவறான கருத்தை அவர் மீளப்பெறவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இநடந்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,

தலைவரின் திருமண வாழ்க்கை தொடர்பான விடயத்தில் 14 பேரை தான் சுட்டுக் கொன்றதாக தன்னிடம் தெரிவித்தார் என திருமாவளவன் கூறியமை எமது மக்கள் கூட்டத்தினரை பற்றி என்ன கருதுகிறார் என சினக்க வைக்கிறது.

அவ்வாறாயின் 14 பேரில் சடலங்களைக் கடந்தா தனது வாழ்வை தலைவர் கட்டியமைத்தார்? மேலும் நாட்டுப் பேச்சாளர் என்று ஒருவருக்கு மதிப்பளிக்கும் போது அவரது போராட்ட பங்களிப்பு சமூகத்துடனான உறவாடல் போன்ற விடயங்கள் மிக ஆழமாக பரிசீலித்த பின்னே அறிவிக்கப்படுகின்றது.

மகள் ஒரு பட்டதாரி ஆவாள் என்ற கனவுடன் இருந்த மதிப்புக்குரிய ஏரம்பு ஐயாவுக்கு அது கலைந்து போனதில் ஆரம்பத்தில் ஏமாற்றமாக இருந்திருக்கலாம்.

ஆனால் பாலச்சந்திரன் என்ற தனது மகன் மாவீரர் என்ற நிலையை அடைந்த பின்பும் எந்தெந்த வழிகளில் எமது இனத்திற்கு உதவலாம் என மாவீரர் விடயங்களில் திருமண ஏற்பாடுகள் உட்பட எவ்வளவு அக்கறையுடன் செயல்பட்டார் என்பதை நான் நன்கு அறிவேன்.

தமிழக அரசியலில் எவ்வாறான நிலைப்பாடுகள் இருந்தாலும் எவரையும் பகைக்காத போக்கே பொதுவாக இருந்து வந்துள்ளது.

தன்னை எல்லோரையும் விட மேலாக கருதி சில அந்தரங்கங்களை பகிர்ந்து கொண்டார் தலைவர் என கற்பனையாகவோ தவறாக விளங்கியோ கூறுவது இதுவரை இவர் மீது நம்பிக்கை கொண்ட தமிழர்களை மனம் நோக வைத்துள்ளது.

அந்தவகையில் இத்தகைய தவறான தமது கருத்துக்களை திருமாவளவன் மீளப் பெற வேண்டும். அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பது ஈழத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.