22வது அரசியலமைப்புத் திருத்தத்தினால் அரசாங்கத்துக்குள் பிளவு!

28.09.2026 15:17:35

22வது அரசியலமைப்புத் திருத்தம் காரணமாக அரசாங்கத்துக்குள்ளும், அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் தரப்பினருக்கு இடையில் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார்.

 

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் சட்டம் மற்றும் நீதிமன்ற நடைமுறைகள் குறித்துத் தெளிவான புரிதல் கொண்ட எவரும் இந்தத் திருத்தத்தை ஆதரிக்க மாட்டார்கள். இலங்கையிலுள்ள 99 சதவீதமான சட்டத்தரணிங்கள் இந்தத் திருத்தத்தினால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை உணர்ந்து இதற்கு தீவிர எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகள் சங்கம் மற்றும் நீதிச் சேவை உத்தியோகத்தர்களும் இந்தத் திருத்தத்துக்கு தங்களின் உத்தியோகப்பூர்வ எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

குறித்த 22 ஆவது அரசியலமைப்பு திருத்தமானது முற்றிலும் அரத்தமற்றது. தேவையில்லாத புதிய சிக்கல்களை உருவாக்கி நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத் தன்மையை பாரிய நெருக்கடிக்கு எடுத்து செல்லும் ஒரு நடவடிக்கையாகும்.

மேலும் இந்த அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்தால் ஏற்பட்ட முரண்பாடுகளின் காரணமாக அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் அரசாங்கத்தை விட்டுப் பிரிந்து சென்றுள்ள உண்மை நிலையை அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்திலேயே வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், காலையில் பாராளுமன்றத்தில் இவ்வாறான ஒரு கருத்தைத் தெரிவித்த அமைச்சர் மாலையில் தான் அவ்வாறு கூறவே இல்லை என்று தனது சொந்தக் கருத்தை மறுத்துப் பேசியுள்ளார்.

ஒரே நாளில் காலையிலும் மாலையிலும் அவர் வெளியிட்ட முரண்பாடான கூற்றுக்களை ஒன்றாக வைத்து பார்ககும்போது 22 ஆவது அரசியலமைப்பு திருத்தப் பிரச்சினையால் தற்போதைய அரசாங்கம் எந்தளவுக்கு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை மிக தெளிவாக வெளிப்படுகிறது என்றார்.