நாளை ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்கிறது 6 கட்சி கூட்டணி!
|
தமிழ்பேசும் மக்களின் நலன்களை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை கடந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்த 6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் திங்கட்கிழமை (3) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவையும், எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவையும் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். |
|
இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளும் தமது சுயாதீனத்துவத்தையும் கொள்கைகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும் பேணிக்கொண்டு, பொது இணக்கப்பாடு எட்டப்படும் விடயங்களில் தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டிருந்தன. அதன் நீட்சியாக, தமிழ்பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேரமொன்றை வழங்குமாறு அக்கட்சிகளின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்திருந்தனர். இவ்வாறானதொரு பின்னணியிலேயே திங்கட்கிழமை (3) மு.ப 10.00 மணிக்கு மேற்படி 6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். இச்சந்திப்பின்போது விசேடமாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம், காலந்தாழ்த்தப்பட்டுவரும் மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்துதல் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல் ஆகிய 3 விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் விசேடமாகக் கலந்துரையாடப்படவுள்ளது. இவற்றுடன் மலையக தமிழ்மக்களுக்கான வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்தல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல், அரசியல் கைதிகளை விடுவித்தல், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்தும் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை நாளைய தினம் பி.ப 3.30 மணிக்கு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்திக்கவுள்ள மேற்படி 6 கட்சிகளினதும் பிரதிநிதிகள், அவருடனும் மேற்குறிப்பிட்ட விடயப்பரப்புக்கள் உள்ளடங்கலாக தமிழ்பேசும் மக்களின் நலன் சார்ந்த விடயங்கள் குறித்துக் கலந்துரையாடவுள்ளனர். |