பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்திய இந்தியா!

16.02.2026 14:16:37

கொழும்பில் அமைந்துள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு நடந்த ஐசிசி டி:20 உலகக் கிண்ணத் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவாக வீழ்த்தியது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இஷான் கிஷானின் அதிரடியான துடுப்பாட்மும், சிறப்பான பந்துப் பரிமாற்றமும் இந்திய அணிக்கு தொடரில் மூன்றாவது வெற்றியை பெற்றுக் கொடுத்ததுடன், அணியை அடுத்த கட்டத்துக்கு செல்ல வழி வகுத்தது. 

பரம எதிரிகளுக்கு இடையிலான இந்த போட்டியின் முன்னும், பின்னும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்க மறுத்துவிட்டனர். 

நேற்றிரவு 07.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியானது முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்கள‍ை பெற்றது.

அணி சார்பில் அதிகபடியாக இஷான் கிஷான் 40 பந்துகளில் 10 பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் அடங்கலாக 77 ஓட்டங்களையும், அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 32 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர். 

பின்னர் 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி மோசமான தொடக்கத்தையே பெற்றது. 

 

ஹார்டிக் பாண்டியா வீசிய முதல் ஓவரில் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஓட்டம் எதுவும் எடுக்காது ரிங்கு சிங்கிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

ஜஸ்பிரித் பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் சைம் அயூப் 06 ஓட்டங்களுடன் வெளியேறி, ​​பாகிஸ்தாண் அணி 6-2 என்ற கணக்கில் இருந்தது.

அணித் தலைவர் சல்மான் ஆகா (4) பும்ராவின் ஓவரில் இறுதிப் பந்தில் மற்றொரு தவறான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்க பாகிஸ்தான் 2 ஓவர்கள் நிறைவில் 13 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு சென்றது.

தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் பாபர் அசாமை 5 ஒட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தபோது, ​​பாகிஸ்தான் ஐந்தாவது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனிடையே, உஸ்மான் கான் சிறிது எதிர்ப்புத் தெரிவித்து, இன்னிங்ஸை சரிசெய்யும் முயற்சியில் 34 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஆறு பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்களை எடுத்தார்.

அவரும் அக்ஸர் படேலின் பந்து வீச்சில், இஷான் கிஷானின் ஸ்மிடம்பிங் மூலம் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து பாகிஸ்தானின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய இறுதியாக அவர்கள் 18 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். 

இதனால், 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது, 2026 ஐசிசி டி20 உலகக் கிண்ணத்தில் சூப்பர் 8 இடத்தைப் பிடித்தது.

போட்டியின் முன்னதாகவும், நாணய சுழற்சியின் போதும், போட்டியின் பின்னரும், இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ்வும், பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் ஆகாவும் கைகுலுக்கவில்லை.

சூரியகுமார் யாதவ் கடந்த ஆண்டு துபாயில் நடந்த ஆசியக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி உட்பட, அவர்களின் மூன்று போட்டிகளில் எதிலும் ஆகாவுடன் கைகுலுக்கவில்லை.

அதேநேரம், உலகக் கிண்ணத்தில் இந்தியாவுக்கு எதிரான மோசமான சாதனையை பாகிஸ்தான் தொடர்ந்தது.

டி20 உலகக் கிண்ணத்தில் இந்தியா விளையாடிய ஒன்பது போட்டிகளில் எட்டு போட்டிகளிலும், ஒருநாள் உலகக் கிண்ணத்தில் எட்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அடுத்து நமீபியாவை எதிர்கொள்கிறது, இந்தியா பெப்ரவரி 18 அன்று நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.