இழுவை மீன்பிடி படகு விவகாரம் – தமிழக மீனவர்களுக்கு கால அவகாசம் கொடுக்க முடியாது
இந்திய − இலங்கை மீனவப் பிரச்சினை தொடர்பில், இலங்கையின் வட பகுதி மீனவர்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், இழுவை படகு மீன்பிடி நடவடிக்கைகளை கைவிட்டு, மாற்று தொழில்களில் ஈடுபட தமிழக மீனவர்கள் காலவகாசம் ஏற்கனவே கோரியிருந்தனர். அந்த காலவகாசத்தை நாம் வழங்கிய போதிலும் தமிழக மீனவர்கள் இழுவை படகு மீன்பிடி தொழிலை கைவிடவில்லை. இது குறித்து இந்திய உயர்ஸ்தானிகரிடம் தெளிவூட்டியுள்ளோம் என வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் தலைவர் எம்.வீ.சுப்ரமணியம் தெரிவிக்கின்றார்.
மேலும் இந்திய மீனவர்களுடனான பேச்சுவார்த்தையின் போது, இழுவை படகு மீன்பிடி நடவடிக்கையை கைவிடுவதற்கு இறுதியாக 2016ம் ஆண்டு மூன்று வருட காலவகாசம் வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், காலவகாசம் வழங்கி தற்போது 5 வருடங்கள் கடந்துள்ளதாகவும், இனி மூன்று நிமிடமேனும் காலவகாசத்தை வழங்க முடியாது எனவும் தாம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கூறியதாக அவர் தெரிவிக்கின்றார்.