முன்னாள் போராளிகளுக்கான அங்கீகாரம் தேவை!

07.11.2024 09:29:47

முன்னாள் போராளுகளுக்கான அங்கீகாரம் தேவை என்பதற்காகவே தாம் 2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் ஜனாநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார்.

  

அவர் வடமராட்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையிலே ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது சிங்கள மக்கள். ஆனால், அவர்கள் எமது பகுதிக்கு வந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப்போவது என்பது ஒரு வேடிக்கையான விடயம்.

இணைந்திருந்த வடக்கு கிழக்கை பிரித்தவர்கள் இந்த ஜே.வி.பி யினர் தான். அதேபோன்று சுனாமி கட்டமைப்பையும், இல்லாமல் செய்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை கூட இல்லாமல் செய்தவர்களும் இந்த ஜே.வி.பி யினர் தான்.

மேலும் ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட யுத்த குற்ற பிரேரணை தொடர்பில் இலங்கையில் யுத்த குற்றம் நடைபெறவில்லை, தாம் எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் விசாரணைக்கு போகத் தேவை இல்லை என்று சொன்னவர்களும் இந்த இந்த ஜே.வி.பி யினர் தான்.

ஆகவே, தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது எங்கள் தலையில் மண் அள்ளி போடும் செயல் என்றும் தெரிவித்ததுடன் நாங்கள் ஜனநாயக ரீதியாக பல கட்சிகளின் கூட்டாக இணைந்து இத் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

ஆயுதப் போராட்ட காலத்தில் எமது இனத்திற்காக எவ்வாறு தூய்மையான போராட்டத்தை முன்னெடுத்தோமோ அவ்வாறான ஒரு தூய அரசியலை மேற்கொண்டுள்ளோம்.புனர்வாழ்வு பெற்று வெளியேறிய எமது போராளிகள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

மாவீரர் குடும்பங்கள் பல துன்பங்களை சந்துத்து வருகின்றனர்.இந்த இன்னல்களை தகர்க்க எமக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள்.ஆயுத வழி மட்டும் எமக்கு தலைமை கற்பிக்கவில்லை அரசியல் ரீதியான கற்பினைகளையும் தலைமை தந்துவிட்டே சென்றது.யுத்தம் மெளனிக்கப்பட்டாலும் மக்ககளுக்கான தூய அரசியலை நாம் முன்னெடுத்தே வருகிறோம்.

கடந்த கால அரசியல் கட்சிகள், தலைமைகள் பிளவடைந்து தமது அரசியல் இருப்பை தக்கவைக்க முனைகின்றனர். நாம் அவ்வாறு அல்ல.ஐந்து கட்சிகள் ஒற்றுமையாக ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியாக ஐக்கியப்பட்டு வந்துள்ளோம். மக்கள் விரும்புவதும் அதுவே. மாற்றம் என்பது மக்கள் விரும்பும் ஒற்றுமையே!

இதனையே தலைவர் அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அனைவரையும் ஒன்றாக்கி ஒற்றுமையாக பயணிக்க வழியமைத்துக் கொடுத்தார். இன்று அதனை சிதைத்துவிட்டு தனித்து தனித்து போட்டியிட்டு 396 பேர் ஆறு ஆசனத்திற்கு போட்டியிடும் அவல நிலையை உருவாக்கி விட்டுள்ளது. ஆகவே, எங்களுக்கு எமது சங்கு சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார்.