பிள்ளைகளின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு.

04.10.2026 15:11:09

“மகத்தான செல்வம் – பிள்ளைகளைப் பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் 2026 உலக சிறுவர் தினக் கொண்டாட்ட நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (03) தெஹிவளை எஸ்.டி.எஸ். ஜயசிங்க விளையாட்டரங்கில் நடைபெற்றது.

 

உலக சிறுவர் தினம் ஒரு நாளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், பிள்ளைகளின் உலகைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டும் நாளாகும் என்றும் தெரிவித்தார்.

 

நாட்டின் அனைத்து பிள்ளைகளும் பெறுமதியானவர்கள் என தெரிவித்த பிரதமர், அவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அரசாங்கம் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து பாதுகாப்பு, விளையாட்டு மற்றும் டிஜிட்டல் வசதிகள் உள்ளிட்ட துறைகளில் விசேட கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

 

2027ஆம் ஆண்டு இரண்டாம் மற்றும் ஆறாம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், பாடசாலைகளில் உட்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

அத்துடன், பாடசாலை போக்குவரத்து வாகனங்களுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பு அளவுகோல்கள், சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கூறினார்.

 

பாடசாலை உணவுத் திட்டம், சுகாதாரம் மற்றும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுவதாக தெரிவித்த அவர், பிள்ளைகள் பாதுகாப்பான சூழலில் சுதந்திரமாக விளையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது அனைவரினதும் பொறுப்பு எனவும் வலியுறுத்தினார்.

 

இந்நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க, தெஹிவளை – கல்கிசை மாநகர சபையின் மேயர் கே.டி. பரகும் சாந்த உள்ளிட்ட பலரும், பெருமளவான பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.