வர்த்தக சட்ட வரைபை பலப்படுத்துதல் குறித்து அலி சப்ரி,நாமல் தலைமையில் கலந்துரையாடல்
இணைய வழி ஊடாக வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது நிலவும் வர்த்தக சட்ட வரைபை பலப்படுத்துதல் குறித்து உரிய தரப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் நேற்று நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் ஒன்லைன் ஊடாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாட்டின் பிரதான வர்த்தக நிறுவனங்களின் பிரதானிகள் பலவரும் கலந்துகொண்டு, ஒன்லைன் ஊடாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான உறுதியான சட்ட வரைபு ஒன்றின் தேவை குறித்து ஆலாேசனை வழங்கியுள்ளனர்.
அத்துடன் ஒன்லைன் ஊடாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வர்த்தன நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் இருதரப்பினருக்கும் நியாயம் கிடைக்கும் வகையிலும் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையிலும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் தேவை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் தற்போது இருக்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு புதிய சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தும் முறைமை தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.
அத்துடன் புதிய சட்ட வரைபை ஏற்படுத்துவதற்கு இந்த வியாபார நடவடிக்கைகளுடன் நேரடியாக தொடர்புபடும் நிறுவனங்கள் மற்றும் நுகர்வோரின் கருத்துக்களையும் பெற்றுக்கொண்டு குறித்த சட்ட வரைபை தயாரிப்பது தொடர்பாகவும் இதன்போது ஆலாேசிக்கப்பட்டதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.