ஆட்சிக்கு வந்ததும் 22வது திருத்தத்தை நீக்குவோம்!

25.09.2026 09:03:09

ஜனநாயகத்துக்கு விரோதமான -அரசியலமைப்புக்கு எதிரான 22 வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொண்டாலும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இதனை நீக்குவோம். ஹிட்லர், முசோலினி சர்வாதிகார போக்கில் செல்லும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

 

22ஆவது அரசியலமைப்புத்திருத்தத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் வியாழக்கிழமை(24) பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைத்து, நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இல்லாதொழிக்க அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஜனநாயகத்துக்கு விரோதமானதும் அரசியலமைப்புக்கு எதிரானதுமான இந்த 22ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொண்டாலும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அதனை நீக்குவோம்.

இந்த அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டது. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் முழு நாட்டையும் தனியொரு கட்சியின் ஆட்சிக்கு உட்படுத்த இவர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த ஜனநாயகத்துக்கு எதிரான முயற்சியை மக்கள் பலத்தாலும் மக்கள் சக்தியினாலும் தோற்கடிக்க வேண்டும். ஜனநாயகத்தை நாசம் செய்யும் இந்த கொலைகார திசைக்காட்டி அரசாங்கத்தையும் அநுர குமார திசாநாயக்கவையும் மக்கள் சக்தியால் எமது ஜக்கிய மக்கள் சக்தியால் வீட்டுக்கு அனுப்புவோம். நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், மக்களின் சுபீட்சத்துக்காகவும், மக்களின் நலனுக்காகவும் ஒன்றிணையக்கூடிய அனைத்து ஜனநாயக சக்திகளுடனும் நாம் ஒன்றிணைவோம்.

ஐக்கிய மக்கள் சக்தியானது இந்த நாட்டு மக்களுக்கு உள்ள மாற்று வழியாகவும் மாற்று அரசாங்கமாகவும் காணப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தை பலப்படுத்தி, மக்கள் பலத்தினாலும் மக்கள் சக்தியினாலும் அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்தை தோற்கடிப்போம்.

இப்போதாவது இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். பாராளுமன்ற ஜனநாயகத்தை அழிப்பதற்கும் நீதித்துறையை பலவீனப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எமக்கு வரலாறு இல்லை. எனவே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் ஒன்றைக் கூற வேண்டும். இன்று பாராளுமன்றத்துக்குள் கொண்டுவரப்படும் இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக இந்த நாட்டின் நீதித்துறைக்கும் ஜனநாயகத்துக்கும் ஏற்படுத்தப்படும் பாதிப்பையும் அழிவையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் ஆட்சிக்கு வரும்போது இந்த நிலைமையை மாற்றியமைப்போம். 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மக்கள் மத்தியில் தோற்கடிப்போம். வறுமையை இல்லாதொழித்து, அனைத்து வர்க்கங்களையும் சேர்ந்த மக்களைப் பாதுகாத்து, ஒட்டுமொத்த 220 இலட்சம் மக்களையும் வாழவைக்கக்கூடிய ஒரு யுகத்தை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கையில்,

அநுர குமார, ஹரிணி, பிமல் ரத்நாயக்க ஆகியோர் பாராளுமன்ற நுழைவாயிலை திறந்து வைத்து நாங்கள் உள்ளே வருவோம் என்று நினைத்தார்கள். ஆனால் நாங்கள் இங்கு ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே வந்துள்ளோம். மக்கள் விடுதலை முன்னணியினரைப் போன்று பாராளுமன்றத்துக்கு தீ வைக்க நாம் வரவில்லை என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கையில், ஹிட்லர், முசோலினி ஆகியோரின் சர்வாதிகார நோக்கில் அநுரகுமார திசாநாயக்கவும் திசைகாட்டி அரசாங்கமும் ஆட்சி செய்கின்றனர். நாட்டின் ஜனநாயக அமைப்பை பாதிக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று பொல்துவ சந்திக்கு வந்தது மக்கள் விடுதலை முன்னணியினரைப் போன்று பாராளுமன்றத்துக்கு தீ வைக்க அல்ல. அன்றைய மக்கள் போராட்ட காலத்தில் பாராளுமன்றத்துக்கு தீ வைக்க முயன்றவர்கள் இன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து வருகின்றனர். நாம் பாராளுமன்றத்துக்கு தீ வைக்கவும் வரவில்லை. பாராளுமன்றத்தை உடைக்கவும் வரவில்லை. இந்த நாட்டின் மக்களின் ஜனநாயகத்தையும் நீதித்துறை சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காகவே இங்கு ஒன்றுகூடியுள்ளோம் என்றார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவிக்கையில்,

நாங்கள் இன்று ஒன்று கூடியிருப்பது பாராளுமன்றத்தை தீயிட்டு அழிக்க அல்ல. தீயிட்டப்பட்டுள்ள ஜனநாயகத்தை நீர் ஊற்றி அணைக்கவே இங்கு வந்துள்ளோம். 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அன்று என்னோடு இருந்து போராடிய அநுர காணாமல் போய்விட்டார் என்றார்.