போர் வெற்றிச் சின்னம் ஏன் அகற்றப்படவில்லை?
|
முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கான வழிகாட்டித் தளம் அகற்றப்பட்டமைக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். |
|
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த செப்டெம்பர் 14ஆம் திகதி வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முள்ளிவாய்க்கால் நினைவிட வளாக வீதி என குறிப்பிடப்பட்டிருந்த சீமெந்து வழிகாட்டித் தளம் அகற்றப்பட்டதாக தெரிவித்தார். அதேவேளை, முள்ளிவாய்க்கால் மேற்கு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமின் பெயர் பொறிக்கப்பட்ட தளமும், புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் போர் வெற்றிச் சின்னமும் ஏன் அகற்றப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பினார். முள்ளிவாய்க்கால் நினைவிட வழிகாட்டித் தளத்தை அகற்றியதன் மூலம் தமிழ் மக்களின் நினைவுகளையும் உணர்வுகளையும் அழிக்க முடியாது என தெரிவித்த ரவிகரன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடவடிக்கைகளுக்கு கடந்த காலங்களில் பல்வேறு தடைகள் மற்றும் விசாரணைகளை எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்டார். தமிழ் மக்களின் உணர்வுகளையும் அபிலாஷைகளையும் புறக்கணித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கான வழிகாட்டித் தளம் அகற்றப்பட்டமைக்கு முள்ளிவாய்க்கால் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக தான் வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதாக ரவிகரன் கூறினார். |