போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டக்குள் வந்த அரச தலைவரின் மாளிகை!

09.07.2022 10:27:19

கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச தலைவர் மாளிகை வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

இதேவேளை, அரச தலைவர் மாளிகை இப்போது போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல் தடைகளை மீறி அரச தலைவர் மாளிகையின் வாயிலை அடைந்துள்ளனர்.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியுள்ள நிலையில், படையினர் பொல்லுகளுடன் தயார் நிலையில் உள்ளைமை குறிப்பிடத்தக்கது.

 

கொழும்பு அரச தலைவர் மாளிகைக்கு அருகே போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வீதித்தடைகளை உடைத்து அரச தலைவர் மாளிகையினுள் செல்ல முயற்சித்த போது அவர்களை தடுக்கும் முகமாக இராணுவத்தினர் வானத்தை நோக்கி இரண்டு தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

 

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை தாக்குதலில் 2 காவல்துறையினர் உட்பட 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு

கொழும்பில் அரச தலைவர் மாளிகைக்கு அருகில் செத்தம் வீதிப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

குறித்த பகுதியில் ஆயிரக்காண ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு போராட்டம் நடாத்தியுள்ளனர்.

இந்நிலையில், வீதித்தடைகளை அமைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ள போது அவற்றை தகர்த்து எறியும் முயற்சியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர்.