1000 ரூபா வழங்காத கம்பனிக்கு, அரசாங்கம் விடுத்த கடும் எச்சரிக்கை
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாள் சம்பள அதிகரிப்பை வழங்காத கம்பனிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைபாடுகள் குறித்து ஆராய்வதற்கு விசேட ஆணையாளர் ஒருவரின் கீழ், சபையொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.
நுவரெலியா பகுதியில் நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சம்பள அதிகரிப்பை வழங்காத கம்பனிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான தரவுகளை சேகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என சில மாதங்களுக்கு முன்னர் சம்பள நிர்ணய சபை அறிவித்திருந்தது.
எனினும், சம்பள நிர்ணய சபையின் அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தி, பெருந்தோட்ட கம்பனிகள் நீதிமன்றில் மேன்முறையீட்டை செய்துள்ளன.
எவ்வாறாயினும், சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இதுவரை இடைகால தடை உத்தரவை பிறப்பிக்காத பின்னணியில், சில பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களுக்கு இதுவரை 1000 ரூபா நாள் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்கவில்லை.
இந்த நிலையில், தமக்கான 1000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்குமாறு கோரி, பெருந்தோட்ட தொழிலாளர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.