மீளுருவாக்கம் செய்யும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது.

07.10.2026 09:00:00

உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு; அதனை நாங்கள் தடுக்கவில்லை. இருப்பினும், தடைசெய்யப்பட்ட அமைப்புக்களை மீளுருவாக்கம் செய்யும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. வடக்கு மற்றும் கிழக்கில் ஆயுத மோதல்கள் நிலவிய காலப்பகுதியில் செயற்பாட்டில் இருந்த 07 துணை ஆயுதக் குழுக்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகின்றன என்று பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற அமர்வில், வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

"வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் ஆயுத மோதல்கள் நிலவிய காலப்பகுதியில் தொழிற்பாட்டில் 07 துணை ஆயுதக் குழுக்கள் காணப்பட்டன. தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழப் புரட்சிகர மாணவர் அமைப்பு, கருணா தரப்பு மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியன அவ்வமைப்புகளாகும். இந்தக் குழுக்களால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கையைத் தனித்தனியாகக் குறிப்பிடுவது இயலாது.

ஈ.பி.டி.பி. குழுவிடமிருந்து இராணுவத்தால் 161 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், டக்ளஸ் தேவானந்தாவுடன் தொடர்புடைய விசாரணைக்காக 30 ஆயுதங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. புளொட் அமைப்பிடமிருந்து 23 ஆயுதங்களும், கருணா குழுவிடமிருந்து 615 ஆயுதங்களும் என்ற அடிப்படையில் மொத்தமாக 801 ஆயுதங்கள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படைச் செயற்பாட்டுப் பிரதேசங்களில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் மற்றும் சோதனைகளின் போதும், புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலும் கண்டுபிடிக்கப்பட்ட 28 ஆயுதங்கள் பின்னர் கடற்படை ஆயுதத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தத் துணை ஆயுதக் குழுக்களின் தலைவர்களும் அதன் பெரும்பாலான உறுப்பினர்களும் தற்போது செயற்பாட்டு அரசியல் நீரோட்டத்தில் பிரவேசித்துள்ளனர். மேலும், இந்தக் குழுக்களிடமிருந்து தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறதா என்பது தொடர்பில், பாதுகாப்புப் படைத் தலைமையகங்களின் கீழ் நிறுவப்பட்டுள்ள காலாட்படைப் பிரிவுகள், காலாட்படைப் படைப்பிரிவுத் தலைமையகங்கள் மற்றும் அனைத்து இராணுவப் பிரிவுகளினாலும், அத்துடன் புலனாய்வுப் பிரிவுகளினாலும் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களை மீளுருவாக்கம் செய்வதும், அந்த அமைப்புடன் தொடர்புடைய விடயங்களை வெளிப்படுத்துவதும் சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும். வடக்கில் திலீபனுக்குச் சிலை வைத்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு; அதனை நாங்கள் தடுக்கவில்லை. இருப்பினும், தடைசெய்யப்பட்ட அமைப்புக்களை மீளுருவாக்கம் செய்யும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது" என்றார்.