இன்று முதல் எரிசக்திக்கு புதிய கட்டண முறை.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அடிப்படையாகக்கொண்ட மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவுசெய்வதற்கான கட்டணங்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு, இந்தப் புதிய கட்டணங்கள் இன்று (25) முதல் அமுலுக்கு வருமென அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டண முறைக்கான நடைமுறையும் விலைகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
மின் உற்பத்தியின் தன்மையை அடிப்படையாகக்கொண்டு மூன்று வகைகளின் கீழ் புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தி நிலையங்களுக்கான கட்டண முறை, மின்சார நுகர்வோருக்கான கட்டண முறை மற்றும் மின்கல சேமிப்பு அமைப்புகளைக் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தி நிலையங்களுக்கான கட்டண முறை என்ற மூன்று கட்டண முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த ஒவ்வொரு பிரிவுக்கும் உரிய புதிய கட்டண முறைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
சிறிய நீர்மின் அடிப்படை கட்டணமாக 30.37 ரூபாவும் (ஒரு கிலோ வோட்), காற்றாலை 20.80 அடிப்படை கட்டணமும் பயோமாஸ் டேன்ரோவுக்காக அடிப்படை கட்டணமாக 16.43 ரூபாவும் விவசாயத் தொழிற்சாலை அடிப்படை கட்டணமாக 14.29 ரூபாவும் நகர திடக்கழிவு அடிப்படைக் கட்டணமாக 41.72 ரூபாவும் கழிவு வெப்ப மீட்பு அடிப்படை கட்டணமாக 14.29 ரூபாவும் தரை அமைப்பு Solar PV அடிப்படைக் கட்டணமாக 18.00 ரூபாவும் மிதக்கும் Solar PV அடிப்படைக் கட்டணமாக 23.58 ரூபாவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நகர திடக்கழிவிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு பட்டியலில் குறிப்பிடப்பட்ட அடிப்படைக் கட்டணம் 41.72 ரூபாவாக உள்ளது. அதேவேளை மினி ஹைட்ரோசுக்கு 30.37 ரூபா, மிதக்கும் சோலருக்கு 23.58 ரூபா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Rooftop Solar / Prosumer கட்டணங்களாக, (ஒரு மணிநேரத்துக்கு) 10 கிலோ வோட் வரை 23.10 ரூபாவும் 10 கிலோ வோட்டுக்கு மேல் – 40 கிலோ வோட் வரை 19.15 ரூபாவும் 40 கிலோ வோட்டுக்கு மேல் – 250 கிலோ வோட் வரை 17.11 ரூபாவும் 250 கிலோ வோட்டுக்கு மேல் – 1,000 கிலோ வோட் வரை 15.81 ரூபாவும் 1,000 கிலோ வோட்டுக்கு மேல் 15.81 ரூபாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெட்டரி மின் களஞ்சிய முறையுடன் இணைக்கப்பட்ட புதிய Rooftop Solar திட்டங்களுக்கு, முதல் 15 ஆண்டுகளுக்கான சிறப்புக் கட்டணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக, 250 கிலோ வோட் – 1,000 கிலோ வோட் பிரிவில் 45.53 ரூபா, 1,000 கிலோ வோட்டுக்கு மேற்பட்ட பிரிவில் 42.49 ரூபாவென அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.