காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்!

05.10.2026 15:39:18

தீர்க்கப்படாத மனிதாபிமானப் பிரச்சினைகளைக் கையாள்வதில் பக்கச்சார்பற்ற, மனிதாபிமானமான, சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட மற்றும் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது முக்கியமானதாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

 

இலங்கையிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தூதுக்குழுவின் தலைவர் ஏஞ்சலிக் அப்பெய்ரூக்ஸ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

தீர்க்கப்படாத மனிதாபிமானப் பிரச்சினைகளைக் கையாள்வதில் பக்கச்சார்பற்ற, மனிதாபிமானமான, சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட மற்றும் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது முக்கியமானதாகும்.

அத்துடன், இத்தகைய மனிதாபிமானத் தேவைகளுக்குத் தொழில்முறைசார் மற்றும் பக்கச்சார்பற்ற முறையில் பதிலளிக்கக்கூடிய நம்பகமான மற்றும் நிலைபேறான இலங்கை நிறுவனக் கட்டமைப்பொன்றை தாபிப்பதன் தேவையும் சுட்டிக்காட்டத்தக்கது.

மோதல்கள் முடிவுக்கு வந்த மாத்திரத்தில் அதன் மனிதாபிமானத் தாக்கங்கள் முடிவுக்கு வருவதில்லை. தமது அன்புக்குரியவர்கள் குறித்த தகவல்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குடும்பங்களுக்கு அவர்களின் இனம், மதம், புவியியல் இருப்பிடம் சார்ந்த பின்னணி அல்லது அரசியல் பின்னணி போன்ற பாராபட்சங்களை காட்டாது, மரியாதை, கருணை மற்றும் நீதி என்பன அவர்களுக்கு கிட்ட வேண்டும்.

இந்த மனிதாபிமானத் தேவைகளுக்குத் தொழில்முறையாகவும், பக்கச்சார்பின்றியும் பதிலளிக்கக் கூடிய நம்பகமான இலங்கை நிறுவனங்களை வலுப்படுத்துவதே நமது இலக்காக காணப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும் இந்த சந்திப்பில், இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்த மோதல்கள் காரணமாக தொடர்ந்தும் நிலவிவரும் மனிதாபிமானப் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான நிலைபேறான தேசியத் திறன்களை வலுப்படுத்துவதன் அவசியப்பாடுகள் குறித்து இதன்போது இரு தரப்பினரும் முக்கியமாகக் கலந்துரையாடினர்.

குறிப்பாக, காணாமல் போனோர் குறித்த தகவல்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குடும்பங்களின் தேவைகள், சட்ட மருத்துவத் துறையின் (Forensic sector) திறன்களை வலுப்படுத்துவது, அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நடைமுறைப்படுத்தலைத் தொடர்ந்து மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டன.

இலங்கையின் சட்ட மருத்துவத் துறை, காணாமல் போனோரைக் கண்டறிதல் மற்றும் நிறுவனத் திறன்களை வலுப்படுத்துவதற்கு சர்வதேச நிபுணத்துவத்தின் மூலம் பெறக்கூடிய உதவிகள் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டன.

எவ்வாறாயினும், நீண்ட கால மற்றும் நிலையான தீர்வுகளுக்கு இறுதியில் இலங்கையின் தேசிய நிறுவனங்களின் பயனுள்ள செயற்பாடுகளும், அவற்றின் திறன்களும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதன் முக்கியத்துவமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டன.

இலங்கையில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த காணாமல் போன நபர்களின் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தொடர்ந்தும் தமது அன்புக்குரியவர்களின் கதி மற்றும் அவர்கள் இருக்கும் இடம் பற்றிய தகவல்களை எதிர்பார்த்து காத்திருப்பதாக செஞ்சிலுவை சங்கம் அண்மையில் மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன், அக்குடும்பங்களின் மனிதாபிமானத் தேவைகள் தொடர்பாக தொடர்ச்சியான மற்றும் கூட்டு முயற்சியின் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றம், தேசிய நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் எஞ்சியுள்ள மனிதாபிமான சவால்களுக்குத் தீர்வுகளைக் காணவும், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்திற்கான மதிப்பினை வலுப்படுத்தவும் ஆக்கபூர்வமாகப் பங்களிக்கக்கூடிய துறைகள் தொடர்பாக செஞ்சிலுவை சங்கத்துடன் தொடர்ந்தும் கலந்துரையாடலில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும் எதிர்க்கட்சி தலைவர் இதன் போது ஏற்றுக்கொண்டனர்.