(UNICEF) நிறைவேற்றுச் சபைப் பிரதிநிதிகள் குழு பிரதமரைச் சந்தித்தது.

04.06.2026 15:00:00

இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் சபைப் பிரதிநிதிகள் குழு, இன்றுஅலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தது.

பிரதிநிதிகள் குழுவை வரவேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சிறுவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கு யுனிசெஃப் அமைப்பினால் வழங்கப்படும் ஒத்துழைப்பிற்குத் தனது நன்றிகளைத் தெரிவித்ததோடு ‘தித்வா’ சூறாவளியின் பின்னர் யுனிசெஃப் அமைப்பினால் உடனடியாக வழங்கப்பட்ட நிவாரணம் மற்றும் உதவிகளைப் பாராட்டினார்.

 

சிறுவர்களுக்கான சட்டப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துதல், சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் தடுத்தல் மற்றும் சிறுவர்களின் போசாக்கின்மை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இரு தரப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கு இந்தச் சந்திப்பு ஒரு முக்கியமான வாய்ப்பாகும் எனச் சுட்டிக்காட்டிய பிரதமர்,  இலங்கையில் வலுவான கொள்கை மற்றும் சட்டக் கட்டமைப்பு இருந்தபோதிலும்,  சிறுவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமுதாயத்தினர் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகளை வழங்கும்போது,  அந்தக் கொள்கைகள் மற்றும் சட்டங்களை வினைத்திறன் மிக்க விதத்தில் நடைமுறைப்படுத்துதல் மற்றும் அமுல்படுத்துதல் என்பனவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் கல்விச் சீர்திருத்தச் செயன்முறையைப் பாராட்டிய யுனிசெஃப் பிரதிநிதிகள், சிறுவர்களை மையமாகக் கொண்ட வேலைத்திட்டங்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் யுனிசெஃப் நிறைவேற்றுச் சபையின் தலைவர் Rein Tammsaar (Estonia) , உப தலைவர் Sophia Tesfamariam (Eritrea) , உப தலைவர் Alejandra Hernandez Gonzalez (Dominican Republic) உள்ளிட்ட யுனிசெஃப் நிறைவேற்றுச் சபைப் பிரதிநிதிகள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related