சாணக்கியன் எம்.பி. கண்டனம்.
யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகதீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
திலீபன் அகிம்சை வழியில் போராடி உயிர்தியாகம் செய்த நிலையில், அவருக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதில் எந்தத் தவறும் இல்லையெனவும் திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்தை தமிழரசுக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சிலையை அகற்றியது பொலிஸார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் எனக் குறிப்பிட்ட சாணக்கியன் எம்.பி., இந்த விவகாரத்தை திசைதிருப்பும் வகையில் சில தரப்பினர் தவறான கருத்துகளை பரப்புவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியதற்காக சமூக ஊடகங்களில் தமக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகள் வெளியிடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கு எதிராக கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் என சாணக்கியன் எம்.பி. கேட்டுக்கொண்டார்.