ஈரானிய எண்ணெய் கப்பல்களால் இலங்கைக்கு புதிய இராஜதந்திர சவால்.
அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்ட ஈரானிய மற்றும் ஈரானுடன் தொடர்புடைய சுமார் 20 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் இலங்கையின் தென்மேற்கு கடற்பகுதிக்கு அருகில் தரித்து நிற்பதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கப்பல்கள் இலங்கையின் தென்மேற்கு கரையிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் தரித்து நிற்பதாகவும், அவற்றில் சில கப்பல்கள் உணவு, குடிநீர் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய மசகு எண்ணெயை சீனாவுக்கு கொண்டு செல்வதில் ஈடுபட்ட ஈரானுடன் தொடர்புடைய கப்பல் தொகுதிகளின் ஒரு பகுதியாகவே இக்கப்பல்கள் இருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக இக்கப்பல்கள் ஈரானிய மசகு எண்ணெயை மலேசியாவுக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்புக்கு கொண்டு சென்று, அங்கு மற்ற கப்பல்களுக்கு எண்ணெயை மாற்றிய பின்னர் மீண்டும் ஈரானுக்குத் திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்காவின் தடைகள் மற்றும் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக இந்தச் செயன்முறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், மசகு எண்ணெயை இறக்கிய பின்னர் சில கப்பல்கள் ஈரானுக்கு திரும்ப முடியாத அல்லது திரும்ப விரும்பாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்துக்கு அருகாமையில் ஈரானியக் கொடியுடனான கப்பல்கள் தரித்து நிற்பது, நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர ரீதியில் சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்தச் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த கப்பல்கள் இலங்கையின் கடற்பரப்புக்கு வெளியே இருப்பதால், அவற்றின் மீது இலங்கை அரசாங்கத்துக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தடை விதிக்கப்பட்ட கப்பல்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டால் இலங்கை வெளிநாட்டு அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிடலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.