கோட்டாபயவும் ரணிலும் பதவி விலகாவிட்டால் இலங்கை முழுமையாக முடங்கும் !
அரசதலைவர் கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாளை 13 ஆம் திகதி பதவி விலகாவிட்டால் நாடு பூராகவும் நிர்வாக முடக்கத்தில் ஈடுபடுவோம் என்று ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அரசதலைவர் கோட்டபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி வகிப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் அவர்களுக்கு கிடையாது எனவும் சுட்டிக்காட்டினார்.
நிர்வாக முடக்கல்
இலங்கை அரசியல் வரலாற்றில் எந்த அரச தலைவரையும் நாட்டு மக்கள் இந்தளவிற்கு வெறுக்கவில்லை. அரசதலைவர் கோட்டாபய ராஜபக்சவை மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
நாட்டு மக்கள் ஒன்றினைந்து பதவி விலகுமாறு வலியுறுத்தும் போது அரசதலைவர் பதவி விலகலுக்காக சுபவேளை பார்த்துக்கொண்டிருக்கிறார். அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை நிச்சயம் பதவி விலக வேண்டும்.