காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை ஆரம்பம்!
இலங்கை சுங்கத்தின் சிறப்பான மாற்றத்திற்காக, ஜனாதிபதி அலுவலகத்தின் வருமான நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பிரிவு மற்றும் இலங்கை சுங்கம் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ள டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை (Paperless Customs Declaration Process) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் இலங்கை சுங்க கேட்போர் கூடத்தில் இன்று (01) இந்நிகழ்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி, இன்று முதல் அனைத்து இறக்குமதியாளர்களும் தமது சுங்க ஆவணங்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய ஆவணங்களை, செல்லுபடியாகும் டிஜிட்டல் கையொப்பத்துடன் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், பழைய முறையில் சமர்ப்பிக்கப்படும் சுங்க ஆவணங்களை ஏற்றுக்கொள்வது இனிமேலும் இடம்பெறமாட்டாது.
இந்த டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை மூலம், சுங்க அனுமதி செயல்முறையின் கீழ் மிகவும் செயற்திறனுள்ள, வேகமான மற்றும் வெளிப்படைத்தன்மை வாய்ந்த சேவைகளை வழங்க முடியும். அதன் மூலம் முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியம். தற்போது இந்தச் செயல்முறையில் 1144 நிறுவனங்கள் இணைந்துள்ளன.
நிகழ்வில் உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர
இருநூறு வருட சுங்க வரலாற்றில் சிறப்பான மைல்கல்லைப் பதிக்கும் நாளாக இன்றைய தினம் அமைகிறது. அதாவது, தேசிய ஒற்றைச் சாளரக் கட்டமைப்பு ஒன்றை நிறுவும் இலக்கு.
அதாவது வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒரே இடத்தில் நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய ஒற்றைச் சாளரம் ஒன்றை உருவாக்கும் செயற்பாட்டின் ஒரு முக்கியமான மைல்கல்லாகவே இந்த டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை அமைகிறது.
இதன் மூலம் இணையவழி ஊடாக இறக்குமதி, ஏற்றுமதி செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து சுங்க நடவடிக்கைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும். இது பொதுமக்களின் மாத்திரமின்றி, வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் என அனைவரதும் நேரத்தையும், பணத்தையும், வளங்களையும் மீதப்படுத்திக் கொடுக்கும் ஒரு முறைமையாகும்.
தற்போது சுங்கம், இந்த ஆண்டுக்கான வருமான இலக்குகளைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ள 2,207 பில்லியன் ரூபா இலக்கினை இப்போது அது நெருங்கியுள்ளது. கடந்த ஆண்டும் உங்கள் நிறுவனம் இவ்வாறே இலக்கைத் தாண்டியது.
நீங்கள் மட்டுமல்ல, அனைத்து வருமானம் ஈட்டும் நிறுவனங்களும் தங்கள் இலக்குகளைத் தாண்டியதால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றது. அதனால்தான் எங்களால் டிட்வா சூறாவளிக்கு சிறப்பாக முகங்கொடுக்க முடிந்தது. குறைந்த நிதிப் பற்றாக்குறையைக் கொண்ட ஒரு வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்க முடிந்தது. மத்திய கிழக்கு போர்ச் சூழலில் எரிபொருள் விலை உயர்ந்த போதிலும், அது நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தாதவாறு நிர்வகித்துக் கொள்ள முடிந்தது.
இதுவரை 1,300 - 1,400 பில்லியன் ரூபா அளவில் இருந்த மூலதனச் செலவீனத்தை எதிர்வரும் ஆண்டில் 2,000 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க நாம் எதிர்பார்க்கிறோம்.
அரச ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்காகத் திறைசேரியில் பணம் சேரும் வரை காத்திருந்த ஒரு காலப்பகுதியைக் கடந்து வந்திருக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். அத்தகைய காலப்பகுதியைக் கடந்து இன்றைய நிலைக்கு வருவதற்கு இலங்கை சுங்கம் உள்ளிட்ட வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் வழங்கிய சிறப்பான பங்களிப்பு பெரும் உதவியாக இருந்தது.
எதிர்வரும் ஆண்டில் எமது வரி முறையை மிகவும் இலகுவாகவும் எளிதாகவும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. சுங்க வரிக்கு மேலதிகமாக அறவிடப்படும் ஏனைய வரிகளை நீக்கி, படிப்படியாக வரியை இலகுபடுத்துவதற்கு அவசியமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஏனைய நிறுவனங்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் இத்தகைய எளிய முறைகள் பின்பற்றப்படும். நிறுவனங்களுடன் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை ஒருங்கிணைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும். அந்தப் பயணத்தின் ஒரு மைல்கல்லாகவே இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமையை நாம் காண்கிறோம்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க,
நாட்டின் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கு சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்துவது அவசியமாகும். அதற்கான தடைகள் நீக்கப்பட வேண்டும். குறிப்பாக, வர்த்தக வசதிகளை அதிகரிப்பதுடன், அதற்கான செலவுகளையும் எடுக்கும் காலத்தையும் குறைப்பது முக்கியமானது.
இது குறித்து விசேட கவனம் செலுத்தி, சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்துவதற்கும் அவசியமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் ஜனாதிபதி செயலகத்திற்குள் 'வருமான நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பிரிவு’ ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவின் ஊடாக வருமானம் ஈட்டும் மூன்று நிறுவனங்களின் சீர்திருத்தச் செயல்முறையை வலுப்படுத்தவும், அதற்கு ஏற்படும் தடைகளை நீக்கி அந்தச் செயல்முறையை முறையாக முன்னெடுக்கவும் உதவியளிக்கப்படுகிறது.
இந்த வருமானம் ஈட்டும் திணைக்களங்கள் சாதகமான போக்கைக் காட்டியுள்ளன. அவை வருமான இலக்குகளைத் தாண்டிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, எதிர்வரும் மாத இறுதிக்குள் இந்த ஆண்டிற்கான இலக்கைத் தாண்டும் நிலையை சுங்கம் அடைந்துள்ளது. இலங்கைச் சுங்கத்தை தெற்காசியாவில் மாத்திரமன்றி, ஆசியாவிலேயே தலைசிறந்த சுங்க நிறுவனமாக மாற்றுவதற்கு எமக்கு இந்தச் செயல்முறையின் ஊடாக இயலுமாகும் என நம்புகிறோம்.
1997 ஆம் ஆண்டு முதல் எனக்கு இந்த நிறுவனத்தில் கிடைத்த அனுபவத்தின்படி, காலப்போக்கில் சுங்கம் படிப்படியாக உயர் வளர்ச்சி நோக்கிப் பயணம் செய்துள்ளது. காலத்திற்குக் காலம் இடம்பெறும் சீர்திருத்தங்களின் போது சில சிக்கல்களும் சந்தேகங்களும் ஏற்பட்டாலும், காலம் செல்லச் செல்ல அந்த மாற்றம் எவ்வளவு சிறந்தது என்பது புலப்படும்.
இந்தக் காகிதமற்ற முறை பற்றி கலந்துரையாடப்படும் போதும் இத்தகைய தவறான கருத்துக்கள் எழுப்பப்பட்டன. சிலருக்கு வேலைகள் இழக்கப்படும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் சில நிறுவனங்களின் நிறுவன முறைகளை மாற்ற வேண்டிவரும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்று அந்த அனைத்து நிறுவனங்களையும் ஒரே இடத்திற்குள் கொண்டுவர நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். சுங்கம் எடுத்துள்ள இந்த முன்னோக்கிய நகர்வு குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம்'' என்று குறிப்பிட்டார்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும,
நிதி அமைச்சு என்ற வகையில் நாம் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொள்வதற்காகப் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினோம். இப்போது நாம் அதன் பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் மதிப்பீடுகளை உயர் நிலைக்குக் கொண்டுவர எம்மால் முடிந்துள்ளது. இது குறித்து சர்வதேச நிறுவனங்களே பாராட்டியிருப்பது முக்கியமானதாகும்.
இதன் முக்கியத்துவம் என்னவென்றால், அது பொதுமக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் தேவையான நிவாரணங்களை எவ்வாறு வழங்குவது? நாட்டை எவ்வாறு முன்னோக்கி அழைத்துச் செல்வது? என்பதைத் தீர்மானிப்பதாகும். இன்று ஆரம்பிக்கப்படும் டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை அதற்கான நல்லதொரு முன்னெடுப்பாகும்.
இதன் மூலம் மக்கள் தமது சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு செல்லும் காலத்தையும் செலவையும் குறைத்துக் கொள்ள வாய்ப்புக்கிடைக்கிறது. அத்துடன், திறம்படச் செயற்படுத்திக் கொள்வதற்கும் முடிந்துள்ளது. இது பல அமைச்சுகள், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட கூட்டுச் செயற்பாட்டின் விளைவாகும்.
இதன் மூலம் அரச வருமானத்திற்கும் பாரிய பங்களிப்பு வழங்கப்படுகிறது. வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் தமது வருமான சேகரிப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு உயரிய பங்களிப்பு கிடைக்கிறது. எண்ணக்கரு மட்டத்தில் இருந்த விடயங்களை யதார்த்தமாக்கிக் கொள்ள முடிந்தமை குறித்துப் பெருமகிழ்ச்சியடைகிறோம்'' என்று தெரிவித்தார்.
சுங்கப் பணிப்பாளர் நாயகம் விமல் லியனகம,
இலங்கைச் சுங்கம் இருநூறு வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றைக் கொண்ட ஒரு நிறுவனமாகும். தகவல் தொழில்நுட்பத்தை அரச சேவையுடன் இணைத்துக் கொள்வதில் சுங்கத் திணைக்களம் ஒரு முன்னணி நிறுவனமாகப் பங்காற்றியுள்ளது.
தொண்ணூறுகளின் முற்பகுதியில் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களுக்கு முகம் கொடுத்த எமது நிறுவனம், சரியான நேரத்தில் உரிய தொழில்நுட்ப மாற்றங்களை மேற்கொண்ட நிறுவனமாகும். நாம் முன்னெப்போதையும் விட செயற்திறனை இன்று அடைந்துள்ளோம். சமூகப் பாதுகாப்பிற்காகவும் நாம் பாரிய பங்களிப்பை வழங்கி வருகிறோம். ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் எமது நிறுவனம் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
இன்று இந்தக் காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமையை ஆரம்பிக்க கிடைத்தமை அதிலுள்ள மிக முக்கியமான முன்நகர்வாகும். எனவே, இன்று நமக்கு மிகவும் முக்கியமான நாளாகும்'' என்று தெரிவித்தார்.
ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலர் சீவலி அருக்கொட, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, திறைசேரி பிரதி செயலாளர் டி.ஜே.செனவிரத்ன உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.