காலில் செருப்புடன் காவல்துறை சீருடையில் போராட்டக்களத்தில் நின்ற நபர்

11.07.2022 09:45:01

மகரகமை பிரதேசத்தில் கடந்த 9 ஆம் திகதி பேரணியாக சென்ற போராட்டகார்களுடன் இணைந்து கொண்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள காவல்துறை உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் இந்த காவல்துறை உத்தியோகஸ்தர் இருந்துள்ளதுடன் இன்று காலை கோட்டை காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

போராட்டக் களத்தில் காவல்துறை உத்தியோகத்தர்

இவர், காவல்துறை போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வருகிறார். காவல்துறை சீருடையில் காலில் செருப்பை அணிந்து சந்தேகத்திற்குரிய வகையில் போராட்டக்களத்தில் காணப்பட்டதால் அவரை கைது செய்ததாக கோட்டை காவல் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விசாரணையில் வெளியான தகவல்

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அவர் மகரகமையில் போராட்டகாரர்களுடன் இணைந்த காவல்துறை உத்தியோகஸ்தர் என்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட அவரை கோட்டை காவல்துறை தமது பிணையில் விடுதலை செய்துள்ளனர். இந்த காவல்துறை உத்தியோகஸ்தர் சம்பந்தமாக காவல்துறை தலைமையகம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.