கட்சியின் தேர்தல் செயல்முறையில் தவறுகள்.
தமிழரசுக்கட்சியின் அனைத்து தலைவர்களும் கட்சியின் யாப்புக்கு அமைவாக முறையான தேர்தலை நடத்துவதற்கு இணங்கிச் செயற்பட்டால், தான் தொடர்ந்துள்ள வழக்கை மீளப் பெறத் தயாராக இருப்பதாக பரா.சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தற்போதைய வழக்கு தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தேர்தல் செயல்முறையில் தவறுகள் இடம்பெற்றுள்ளதாகவும், கட்சியின் யாப்பு மற்றும் விதிமுறைகளுக்கு முரணான வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக, வாக்களிக்கத் தகுதியானவர்கள் 156 பேர் மட்டுமே இருந்த நிலையில், 326 பேர் வாக்களித்ததாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளதாகவும், இது சட்டரீதியாகவும் ஆவணங்களின் அடிப்படையிலும் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சியின் முக்கியஸ்தர்கள் தேர்தலில் தவறு ஏற்பட்டுள்ளதாக ஏற்றுக்கொண்டு, புதிய தேர்தலை நடத்துவதற்கு முன்னர் இணக்கம் தெரிவித்திருந்ததாகவும், எனினும் வழக்கு நீதிமன்றத்திற்கு சென்ற பின்னர் அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் பதவிகள் தனிநபர்களின் சொத்து அல்ல எனவும், அவை கட்சியின் யாப்பு மற்றும் ஜனநாயக நடைமுறைகளுக்கு அமைவாக உறுப்பினர்களால் வழங்கப்படும் பொறுப்புகள் எனவும் பரா.சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.
எனவே, கட்சியின் யாப்பை மதித்து முறையான புதிய தேர்தலை நடத்தி, உறுப்பினர்களின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் எனவும், அவ்வாறு தேர்தல் நடத்துவதற்கு அனைத்து தலைவர்களும் இணங்கினால் தான் தொடர்ந்துள்ள வழக்கை மீளப் பெறத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.