நெதர்லாந்துக்கு அயர்லாந்து பதிலடி !

05.06.2021 12:13:08

 

நெதர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் அயர்லாந்து அணி சமநிலைப் படுத்தியுள்ளது.

உட்ரெக்ட் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 49.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மேக்ஸ் ஓடவுட் 36 ஓட்டங்களையும் ஸ்கொட் எட்வட்ஸ் மற்றும் லீட் ஆகியோர் தலா 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அயர்லாந்து அணியின் பந்துவீச்சில், கிரைஜ் யங் மற்றும் ஜோசுவா லிட்டில் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் பெர்ரி மெக்கார்தி மற்றும் என்டி மெக்பிரையன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அயர்லாந்து அணி, 43 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹென்ரிவ் பல்ப்பிரையன் ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களையும் போல் ஸ்டெயர்லிங் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில், லோகன் வேன் பீக் மற்றும் பீட்டர் சீலார் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோசுவா லிட்டில் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி 7ஆம் திகதி உட்ரெக்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.