அமெரிக்கத் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டமை மற்றும் மினாப் பாடசாலை தாக்குதல் தொடர்பாக அமெரிக்க, ஐரோப்பிய நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களில் கொமெய்னி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மினாப் நகரிலுள்ள பாடசாலையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 120 பள்ளிக் குழந்தைகள் உட்பட 178 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இச்சம்பவங்கள் போர்க்குற்றங்களாகக் கருதப்படுவதாகக் குறிப்பிட்ட ஈரானின் சட்டவிவகாரத் துறை துணைத் தலைவர் மஜீத் அன்சாரி, ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சில வழக்குகள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், ஏனையவை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்ற அமெரிக்கப் படைகள் முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.