தனித்துவமான கதைக்களங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.  மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய கைதி திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கியது. 
கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளி விருந்தாகத் திரைக்கு வந்த இப்படத்தில் கார்த்தியுடன் நரேன், அர்ஜுன் தாஸ், தீனா, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சாம் சி.எஸ். இப்படத்திற்கு மிரட்டலான பின்னணி இசையை வழங்கியிருந்தார். விஜய்யின்  பிகில் திரைப்படத்துடன் நேரடியாக மோதிய போதிலும்,  கைதி ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.  கார்த்தியின் அசுரத்தனமான நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை, தத்ரூபமான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பின்னணி இசை ஆகியவை படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றன. 
 
இந்நிலையில், கைதி திரைப்படத்தில் முதன்முதலில் நடிக்கவிருந்தது நடிகர் விஜய் சேதுபதிதான் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது.
 
இது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி,  இந்தப் படத்தில் கார்த்தி நடிக்க ஒப்பந்தமானபோது, லோகேஷ் கனகராஜ் என்னைத் தொடர்பு கொண்டு அந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டார். நானும் மனதார எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். லோகேஷ் எனக்கு ஒரு சகோதரர் போன்றவர். அதனால், என்னால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
 
மேலும், லோகேஷ் தன்னிடம் இந்தக் கதையைச் சொன்னபோதே இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதைத் தான் கணித்ததாகவும், தனது திரைப் பயணத்தில் தன் கையை விட்டுச் சென்ற ஒரே முக்கியமான திரைப்படம்  கைதி ' மட்டும்தான் என்றும் விஜய் சேதுபதி அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.