கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி போட்டி

10.11.2022 07:48:58

182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 1-ந்தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின்போது 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5-ந்தேதி 2-வது கட்ட தேர்தலின்போது 99 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்படும். டிசம்பர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த நிலையில் டிசம்பர் 1-ந்தேதி நடைபெறும் முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து, 2-வது கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 10-ந்தேதி தொடங்க உள்ளது. குஜராத்தில், 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் வெற்றியை தக்க வைத்து கொள்ளும் பணிகளில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது. புதிதாக கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயார் செய்வதற்கான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய பா.ஜ.க. தலைவர் நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து தேர்தலில் 160 தொகுதிக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டு உள்ளது. இதனை அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் துஷ்யந்த் குமார் கவுதம் வெளியிட்டு உள்ளார். இந்த தேர்தலில் குஜராத் முதல்-மந்திரியான பூபேந்திர பட்டேல் கத்லோடியா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சாங்கவி மஜூரா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். ஜாம்நகர் வடக்கு தொகுதியில் இருந்து பா.ஜ.க. வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா போட்டியிடுகிறார் என அவர் தெரிவித்து உள்ளார்.