விஜய் போடும் அரசியல் கணக்கு!.

17.12.2025 14:33:53

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். அவரின் தமிழக வெற்றி கழகம் தொடங்கி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என விஜய் நினைக்கிறார். ஆனால் அவருக்காக கூடும் ரசிகர் கூட்டம் வாக்காக மாறாது என திமுக உள்ளிட்ட கட்சிகள் சொல்லி வருகிறார்கள். அதேநேரம் புதிதாக ஓட்டு போடுபவர்கள் மற்றும் பெண் வாக்காளர்களை 40 சதவீதம் பேர் விஜய்க்கு வாக்களிப்பார்கள் என சமீபத்தில் சர்வே கூட வெளியானது. அது நடக்குமா என்பது 2026 தேர்தல் ரிசல்ட்டுக்கு பின்னரே தெரியவரும்.

ஒருபக்கம் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் யாருடன் கூட்டணி வைப்பார் என்கிற கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்திருக்கிறது. கட்சியை துவங்கிய போதே தங்களுடன் கூட்டணி அமைப்பவர்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என விஜய் கூறியிருந்தார். ஆனால் அவர் அதை சொல்லி இரண்டு வருடங்களாகியும் இதுவரை எந்த கட்சியும் அவருடன் கூட்டணி அமைக்கவில்லை.

அதேநேரம் தேர்தல் நெருங்கும் போது கண்டிப்பாக கூட்டணி பேச்சு வார்த்தைகள் துவங்கும்.விஜய் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்தால் மட்டுமே திமுகவை தோற்கடிக்க முடியும். அதை விட்டுவிட்டு விஜய் தனியாக போட்டியிட்டு வாக்குகளை பிரித்தால் அது திமுகவுக்கு சாதகமாகவே அமையும் என அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

ஆனால் அதிமுக பாஜக கூட்டணி சேருவதில் விஜய்க்கு தயக்கம் இருக்கிறது. ஏனெனில் பாஜக தனது கொள்கையை எதிரி என ஏற்கனவே சொல்லியிருக்கிறார். மேலும், அதிமுக பாஜக காலில் விழுந்து கிடப்பதாகவும் அவர் விமர்சித்தார். அதோடு திமுகவை எதிர்ப்பதற்காக இந்த கூட்டணியில் இணைந்தால் ‘மாற்று அரசியல்’ என்கிற இமேஜ் காலியாகிவிடும் எனவும் அவர் நினைக்கிறார். அதே நேரம் கொள்கை கூட்டணியாக இல்லாமல் தேர்தல் கூட்டணியாக அவர் அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்தால் திமுகவிற்கு அது பலவீனமாக அமையும்.

ஒருபக்கம் திமுகவை தவிர்த்துவிட்டு விஜயுடன் கூட்டணி அமைக்க காங்கிஸ் கட்சியும் முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம் அதிமுக-பாஜக கூட்டணியில் விஜயை கொண்டு வரும் முயற்சியில் பாஜகவும் களமிறங்கியிருக்கிறது. யாருக்கும் சரியான பதிலை விஜய் இதுவரை சொல்லவில்லை.

புதுச்சேரி சென்று பேசியதிலிருந்து புதுச்சேரி காங்கிரஸுடன் விஜய் கூட்டணி அமைக்கலாம் என தெரிகிறது. ஆனால் அது தமிழ்நாட்டு அரசியலுக்கு உதவாது. ஒருவேளை காங்கிரசிலிருந்து விலகி அக்கட்சியின் கிளை பிரிவுகள் போல் செயல்படும் கட்சியுடன் அவர் சேரலாம் என்கிறார்கள். அதிமுக. பாஜக கூட்டணி பொருத்தவரை எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்து விட்டார்கள். ஆனால் கண்டிப்பாக அது விஜய் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

ஏனெனில் தான்தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். எனவே கண்டிப்பாக அவர் அதிமுக-பாஜக கூட்டணி பக்கம் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.ஒருபக்கம் அதிமுகவின் கிளையாக செயல்படும் அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தவெக பக்கம் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வேலையை செங்கோட்டையன் செய்து வருகிறார் என்கிறார்கள்.

எப்படி பார்த்தாலும், திமுகவின் எதிர்ப்பு ஓட்டு எங்கு செல்கிறது என்பதை புரிந்து விஜய் கூட்டணி அமைப்பார் என்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் கண்டிப்பாக தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது விரைவில் தெரிந்து விடும்.