அரசு அருங்காட்சியகத்தில் உலக மரபு வார விழா!

24.11.2024 08:36:12

நவம்பர் 19 முதல் 25 வரை உலகம் முழுவதும் ஐநா சபையின் வழிகாட்டுதலின்படி உலக மரபு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. உலக மரபு வாரத்தில் அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ள தொல்லியல் சின்னங்கள் அனைவரின் பார்வைக்காக கட்டணம் இல்லாமல் இலவசமாக அனுமதிக்கப்படுகிறது. தொல்லியல் துறை, தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களால் உலக மரபு நாள் (ஏப்ரல் 18) மற்றும் உலக மரபு வாரம் (நவம்பர் 19 முதல் 25 வரை) சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சிவகங்கை தொல்நடைக்குழு இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிறது. சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை தொல்நடைக் குழு, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் இணைந்து உலக மரபு வாரத்தில் முப்பெரும் விழாவைக் கொண்டாடினர்.

  

முதல் நிகழ்வாக கவியரங்கம் நடைபெற்றது. மரபு நமது உறவு எனும் பொதுத் தலைப்பில் புலவர் கா.காளிராசா கவியரங்கத்தலைமை ஏற்க, கல்லெழுத்து நமது மரபெழுத்து கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ், தொன்மை பேசும் பாறை ஓவியங்கள் கவிஞர் உஷா, பெருங்கற்காலம் மனிதம் போற்றும் பொற்காலம் கவிஞர் அகமது திப்பு சுல்தான், குடைவரை பெருங்கொடை கவிஞர் ப்ரீத்தி அங்கயற்கண்ணி, கீழடி நமது தாய்மடி கவிஞர் ந.முகமது கைஃப் என ஐந்து கவிஞர்கள் கவிதை பாடினர். அதனைத் தொடர்ந்து கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தேனியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் எழில்மிகு வைகைக் குழுவைச் சேர்ந்த மூ. செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூல வைகையில் தொல்லியல் தடையங்கள் எனும் தலைப்பில் கருத்துரையாற்றினார்.

இந்நிகழ்விற்கு, சிவகங்கை தொல்நடைக் குழுவின் தலைவர் நா. சுந்தரராஜன் தலைமை வகித்தார். அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தி. பக்கிரிசாமி வரவேற்புரைத்தார். புலவர் கா.காளிராசா முன்னிலை வகித்து உரையாற்றினார். சிவகங்கை தொல்நடைக்குழு செயற்குழு உறுப்பினர் வித்யா கணபதி முன்னிலை வகித்தார். விட்டனேரி ஊராட்சி மன்றத் தலைவர் கவிஞர் அ. வரதன், சிவகங்கை தமிழவையம் பா. மகேந்திரன், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் இரமேஷ் கண்ணா, சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் து. முனீஸ்வரன், சிவகங்கை தொல்நடைக் குழு உறுப்பினரும் சாக்கவயல் தலைமை ஆசிரியருமான முனைவர் ஜ. ஈஸ்வரி ஆகியோர் வாழ்த்துரைத்தனர். இந்த நிகழ்வை சிவகங்கை தொல்நடைக் குழு செயலர் இரா. நரசிம்மன் தொகுத்து வழங்கினார். இணைச்செயலர் க. முத்துக்குமரன் நன்றியுரைத்தார். மூன்றாம் நிகழ்வாக கல்வெட்டு ஒப்படைப்பு நடைபெற்றது.

இதில் சிவகங்கை தொல்நடைக் குழுவால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொல்லங்குடியை அடுத்த விட்டனேரியில் கண்டெடுத்து அடையாளப்படுத்தப்பட்ட 13ம் நூற்றாண்டு எழுத்து அமைதியில் அமைந்த மாளவச் சக்கரவர்த்தி, கீழ் மங்கலநாட்டு, வழுதிவாள் மங்கலம் ஆகிய செய்திகளை உள்ளடக்கிய அடைக்கலம் பற்றி குறிப்பிடும் அரிய வகை ஆசிரியம் கல்வெட்டு சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் அரசு அருங்காட்சியக காப்பாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மைப்பாதுகாப்பு மன்ற மாணவர்கள், ஆசிரியர்கள், சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த பா. இளங்கோ, பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் ஆறுமுகம், ஆசிரியர் முத்து காமாட்சி,லோப மித்ரா, இலக்கிய வடிவு, தினேஷ் சேதுபதி பிரபாகர், முத்தமிழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.