த. வெ. க சார்பில் இன்று சமத்துவ கிறிஸ்மஸ் விழா.

22.12.2025 15:25:09

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் சிறுபான்மையின மக்களின் வாக்குகளை கவரும் நோக்கில் கிறிஸ்துமஸ் விழாக்களில் தீவிரமாக பங்கேற்று வருகின்றன. 

குறிப்பாக திமுக மற்றும் அதிமுக போன்ற பிரதான கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவிற்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், இந்த ஆண்டு முதல்முறையாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் சார்பிலும் கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இன்று  தவெக சார்பில் 'சமத்துவ கிறிஸ்துமஸ் விழா' பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலை வகிக்க, கட்சித் தலைவர் விஜய் நேரில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தகுதி வாய்ந்த நபர்களுக்கு க்யூஆர் குறியீட்டுடன் கூடிய பிரத்யேக அனுமதிச் சீட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கிறிஸ்தவர்களின் வாக்குகளை பெறுவதற்காகவே அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு இத்தகைய மத நல்லிணக்க விழாக்களில் பங்கேற்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஏற்கனவே திமுக சார்பில், அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழாக்க்கள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது விஜய்யின் இந்த நகர்வு அரசியல் களத்தில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது