ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவற்றை நிறைவேற்றுவதில் மத்திய பாஜக அரசு மிகப் பிடிவாதமாக இருப்பதாகவும், இதற்காகப் பாராளுமன்றக் கூட்டத்தொடர் 100 நாட்கள் ஆன பிறகும் முடித்து வைக்கப்படாமல் பல்வேறு கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.    
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''எந்த அடிப்படையில் பாஜகவின் தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியது அவருடைய பொறுப்பு. ஏற்கனவே திமுக ஆட்சியில் இருந்தபோது நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 சதவீதம் எக்காரணம் கொண்டும் குறையக் கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1972-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ள அந்தப் பிரதிநிதித்துவ சதவீதம் குறையாது என்பதற்கு பாஜக தரப்பிலிருந்து திமுக தலைவருக்கு என்ன புதிய உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அவர் விளக்க வேண்டும்'' என்றார்.திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்த கேள்விக்கு, ''திமுகவின் வரலாற்றிலேயே வேறு எந்தப் பிரச்சனையிலும் இவ்வளவு மிக மிக மோசமான ஒரு அறிக்கை வந்திருக்காது. கடந்த 20-ஆம் தேதி வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல், தாமதமாக வெளியிட்ட அறிக்கையிலும் தமிழ்நாடு அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்று மட்டுமே கேள்வி எழுப்பப்பட்டது.தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போதே, மாநிலத்திற்குள் சிஆர்பிஎப் படையை அனுப்புவதும், மலையை நீதிபதிகள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதும் கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கும் மாநில உரிமைக்கும் விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தல். அந்தத் தீர்ப்பு குறித்து ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் வெளியிடப்பட்ட அறிக்கை மிக மோசமானது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கைக் கொண்டு செல்ல வேண்டும்'' என்றார்.