லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை.

23.04.2026 13:46:07

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர்நிறுத்தத்தை நீடிப்பது குறித்த முக்கியமான பேச்சுவார்த்தை அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான தற்காலிக போர்நிறுத்தம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடையுள்ள நிலையில், அதனை நீடிப்பது குறித்த இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தையை அமெரிக்கா இன்று வாஷிங்டனில் நடைபெறவுள்ளது.

கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் லெபனானில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.

 

இருப்பினும், தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் உருவாக்கியுள்ள ‘பாதுகாப்பு வலயத்தில்’ (Buffer Zone) அவ்வப்போது மோதல்கள் நீடித்து வருகின்றன.

போர்நிறுத்தம் அமுலான பின்னர் நேற்று மிக மோசமான நாளாக அமைந்தது.

இஸ்ரேலியத் தாக்குதலில் ஊடகவியலாளர் அமல் கலீல் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகத் தெற்கு லெபனானில் நான்கு தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில், லெபனான் தூதர் நடா மோவாட் மற்றும் இஸ்ரேலிய தூதர் யெச்சியல் லைட்டர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

போர்நிறுத்தத்தை நீடிக்கக் கோருவதுடன், தெற்கு லெபனான் கிராமங்களில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் கட்டிட இடிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தும்படி வலியுறுத்தவுள்ளது.

மேலும், இஸ்ரேலியப் படைகள் வெளியேறுதல் மற்றும் எல்லை வரையறை குறித்தும் லெபனான் பேசவுள்ளது.

 

ஹெஸ்புல்லா அமைப்பைக் கலைப்பது மற்றும் ஒரு நிரந்தர அமைதி உடன்படிக்கையை எட்டுவதற்கான சூழலை உருவாக்குவதையே தனது இலக்காக இஸ்ரேல் கொண்டுள்ளது.

கடந்த மார்ச் 2 ஆம் திகதி போர் தொடங்கியதிலிருந்து லெபனானில் சுமார் 2,500 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல தசாப்தங்களுக்குப் பிறகு லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் மிக உயர்மட்ட நேரடித் தொடர்புகளாக இந்தப் பேச்சுவார்த்தைகள் பார்க்கப்படுகின்றன.

மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட வாஷிங்டன் எடுத்து வரும் இந்த முயற்சி, பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலில் ஒரு முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது