டெய்லர் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சியை தாக்க திட்டம்!

29.05.2026 08:06:08

பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சியை சீர்குலைக்க திட்டமிட்ட நபருக்கு நீதிமன்றம் தண்டனையை அறிவித்துள்ளது. பிரபல பாப் இசை பாடகரான டெய்லர் ஸ்விஃப்ட்டின்(Taylor Swift) ஈராஸ்(Eras) என்ற சிறப்பு இசை பயணத்தின் ஒரு பகுதியாக வியன்னாவில் தன்னுடைய இசைக் கச்சேரியை நடத்த திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில் இந்த இசை கச்சேரியில் தாக்குதல் நடத்தி நிகழ்ச்சியை சீர்குலைக்க 21 வயது இளைஞர் திட்டமிட்டு இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

    

 

ஆஸ்திரியாவின் தனியுரிமைச் சட்டங்களின் படி, “பெரன் ஏ” என்று அழைக்கப்பட்ட இளைஞர் பொலிஸாரால் அப்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், டெய்லர் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இந்த இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

“பெரன் ஏ” என்ற இந்த சந்தேக நபர், டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை நிகழ்ச்சியில் கத்திகள் மற்றும் கையால் தயாரிக்கப்பட்ட வெடி பொருட்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இளைஞரின் இந்த அச்சுறுத்தலை அடுத்து திட்டமிடப்பட்டிருந்த டெய்லர் ஸ்விஃப்ட்டின் 3 இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற தீர்ப்பிற்கு முன்னதாக “பெரன் ஏ” தனது குற்றத்திற்காக வருந்துவதாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.