அமெரிக்கா–ஈரான் புதிய பேச்சுவார்த்தை!
ஏழு மாதங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் திங்களன்று (28) மத்தியஸ்தர்களுடன் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினர் என்று இரு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின்போது ஈரான் முன்வைத்த ஏழு நாள் கால அவகாசம் கொண்ட முன்மொழிவின் திருத்தப்பட்ட வடிவம் மீதே இனிவரும் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, பேச்சுவார்த்தைகள் குறித்த விவரங்களை அறிந்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுடன் போர் தொடங்கியது. இந்த மோதலில் ஏழு மாதங்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
மேலும், எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய நீர்வழிகள் முடங்கியதால் உலகச் சந்தைகள் அதிர்ச்சிக்குள்ளாகின.
முன்னதாக ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தைகளின்போது, போர்நிறுத்தத்தை மேற்கொள்ள அமெரிக்காவும் ஈரானும் இருமுறை ஒப்புக்கொண்டன; ஆனால் அந்த ஒப்பந்தங்கள் விரைவிலேயே முறிந்துபோயின.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நியூயோர்க்கிலேயே தங்கியிருந்த ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, போர்நிறுத்தம் தொடர்பான தங்கள் அண்மைய முன்மொழிவுகள் மற்றும் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் சீராக்குவதற்கான நிபந்தனைகள் குறித்து அமெரிக்காவின் பதிலை ஈரான் எதிர்பார்க்கிறது என்று கூறியதாக, அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ. (IRNA) தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிகாரிகள் திங்களன்று மத்தியஸ்தர்களுடன் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாக, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
எனினும், அவர் இதுகுறித்த கூடுதல் விவரங்கள் எதையும் அளிக்கவில்லை.
ஈரானின் ஏழு நாள் திட்டமானது, ஈரான் மற்றும் லெபனானில் அனைத்து மோதல்களையும் முடிவுக்குக் கொண்டுவருதல், பல பில்லியன் டொலர் மதிப்பிலான ஈரானிய சொத்துக்கள் மீதான முடக்கத்தை நீக்குதல், ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை நீக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
அதன்பின், எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு மிக முக்கியமான பாதையாகத் திகழும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் அனுமதிக்கும்.
அத்துடன், ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் அந்நாட்டின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கைப்பற்றுவது அல்லது அழிப்பது குறித்த ட்ரம்ப்பின் விருப்பம் ஆகியவை தொடர்பான பேச்சுவார்த்தைகளை இரு தரப்பினரும் மீண்டும் தொடங்குவார்கள்.
கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஈரான் ஒரு விரைவான ஒப்பந்தத்தை விரும்புவதாகக் கூறி, அதன் முன்மொழிவை நிராகரித்ததாக ட்ரம்ப் சனிக்கிழமையன்று தெரிவித்தார்.
இருப்பினும், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் இந்த வாரத்தில் மேலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் ஞாயிறன்று ‘ஆக்சியோஸ்’ (Axios) ஊடகத்திடம் அவர் கூறினார்.
அமெரிக்காவின் நிராகரிப்பு குறித்து மத்தியஸ்தர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை என்றும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்கு முன்னதாக வொஷிங்டனின் உறுதியான நிலைப்பாட்டிற்காக ஈரான் காத்திருப்பதாகவும் அராக்சி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.