உக்ரைனின் தேசிய அறிவியல் அகாடமி மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்!

29.09.2026 14:47:57

ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் உக்ரைனின் தேசிய அறிவியல் அகாடமி சேதமடைந்துள்ளது. உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் உள்ள தேசிய அறிவியல் அகாடமி கட்டிடம் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் மூவர் காயமடைந்தனர். தாக்குதல் நடந்தபோது பல பணியாளர்கள் உள்ளே இருந்ததாக அகாடமி தலைவர் அனடோலி ஜகோரோட்னி தெரிவித்தார். “இது அறிவியலின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இது பயங்கரவாதம்” என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த 19-ஆம் நூற்றாண்டு கட்டிடம் ஜேர்மன் தூதரகம், தேசிய ஓபரா, செயின்ட் வோலோடிமிர் தேவாலயம் மற்றும் பல அரசு அலுவலகங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.

மேலும், அருகிலிருந்த தனியார் மருத்துவமனை மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் முழுவதும் ரஷ்யா, ஜெட் சக்தியுடன் இயங்கும் புதிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி கீவ் நகரில் குடியிருப்பு, அலுவலகம், கிடங்கு, தரவுத்தள மையங்கள் போன்றவற்றை தாக்கி வருகிறது. இதனால் தினசரி பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

இந்த புதிய ட்ரோன்கள் பழைய Shahed அல்லது Geran-2 மாடல்களை விட வேகமாக பறக்கின்றன, தடுக்கும் முயற்சிகளை கடினமாக்குகின்றன.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். “ஒவ்வொரு தாக்குதலும் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. உலகம் இதை நிறுத்தாவிட்டால், பயங்கரவாதிகள் மேலும் முன்னேறுவார்கள்” என்று அவர் X தளத்தில் பதிவு செய்துள்ளார்.