பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

28.06.2026 07:07:25

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பஹ்ரைன் மீது ஈரானிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்தானதை தொடர்ந்து ஹார்மூஸ் நீரிணை திறக்கப்பட்டு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து ஒரு வாரம் முழுமையாக நிறைவடைவதற்கு முன்பாகவே அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் கேள்விக்குறியாகி ஹார்முஸ் மற்றும் மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரிக்க தொடங்கியது.

    

 

கடந்த வியாழக்கிழமை ஹார்முஸ் வழியாக சென்ற கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா ராணுவம் ஈரானில் அமைந்துள்ள அந்நாட்டின் ட்ரோன் சேமிப்பு கிடங்கு மற்றும் கடலோர ரேடார் நிலையங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பஹ்ரைன் நாட்டில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ இலக்குகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரான் ட்ரோன்கள் மூலம் இந்த தாக்குதலை நடத்தியதாக பஹ்ரைன் குற்றம்சாட்டியதோடு, இந்த ட்ரோன் தாக்குதல் பஹ்ரைன் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என கண்டித்துள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இது நடத்தப்பட்டதாக ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.

அதே நேரத்தில், போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை முறையாக பின்பற்றுவதாகவும், ஆனால் ஒப்பந்த விதிமீறல்களுக்கு உரிய பதிலடி கொடுப்போம் என்றும் அமெரிக்கா துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் எச்சரித்துள்ளார்.